இளமதியை அவரது குடும்பத்தில் ஒப்படைத்தது எந்த விதத்தில் நியாயம்..? கொளத்தூர் மணி ஆத்திரம்..!
இளமதியை அவரது குடும்பத்திடமே மீண்டும் ஒப்படைப்பது எந்த விதத்தில் நியாயம் என திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இளமதியை அவரது குடும்பத்திடமே மீண்டும் ஒப்படைப்பது எந்த விதத்தில் நியாயம் என திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர், ‘’இளமதி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக என் மீதும் தோழர்கள் மீதும் கடந்த ஒன்பதாம் தேதி வழக்கு கொடுத்திருக்கிறார்கள். மூன்று நான்கு மணி நேரம் எந்த காவல் நிலையத்தில் இருந்தோமோ அந்தே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கொளத்தூர் காவல் ஆய்வாளர் எங்களுடன் தான் இருந்தார். ஒருவேளை அது உண்மையாக இருக்குமேயானால் அவர்கள் அதைப்பற்றி பேசியிருப்பார்கள். நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.
இப்போதுள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பழைய தேதியிட்ட வழக்காகத்தான் நான் அதைப் பார்க்கிறேன். இருந்தாலும் இப்படிப்பட்ட வழக்குகளை நாங்கள் பலமுறை சந்தித்திருக்கிறோம். குறிப்பாக 1991 ஆம் ஆண்டு கூட நான் தடுப்புக் காவலில் சிறையில் இருந்தபோதே ஒரு குற்றத்தை செய்ததாக என் மீது வழக்குப் போட்டு இருந்தார்கள். இது ஒன்றும் புதிதாக பார்க்கிற செய்தி அல்ல. நாங்கள் அதை உரிய முறையில் நிரூபிக்க தயாராக உள்ளோம்.
இன்று இளமதி காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு வாக்குமூலம் அளித்திருப்பதாகவும், நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருப்பதாக கேள்விப்பட்டோம். அவரது அம்மாவுடன் செல்ல விருப்பம் தெரிவித்ததாகவும் அவருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட வழக்கில் அவருடைய அப்பாவும், பெரியப்பாவும், மாமாவும் இப்போது சிறையில் இருக்கிறார்கள். அந்த குடும்பத்திடமே அந்த பெண்ணை மீண்டும் ஒப்படைப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை.
எந்த எதிர்விளைவுகள் வந்தாலும் அதனை நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம். கடத்தல் வழக்கை நாங்கள் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். நாங்கள் கடத்தல் வழக்கில் யார் மீது புகார் கொடுத்து இருக்கிறோமோ அவர்கள் இப்போது எங்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளார்கள். அதை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்?’’என அவர் தெரிவித்துள்ளார்.