மூன்றாம் அலையைத் தடுக்க என்ன திட்டம் வைச்சுருக்கீங்க..? மோடி அரசிடம் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்கும் ராகுல்.!
கொரோனா மூன்றாம் அலையைத் தடுக்க மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது என மத்திய அரசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோன இரண்டாம் அலையால் இந்தியா பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. இந்நிலையில் தற்போதுதான் கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்துவருகிறது. 4 லட்சம் என்ற அளவில் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக 50 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது. ஆனால், வேற்றுருவம் அடையும் கொரோனா வைரற், தற்போது டெல்டா பிளஸ் என்று மாறியுள்ளது. இந்த கொரோனா தற்போது பரவ தொடங்கியுள்ளது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த டெல்டா பிளஸ் கொரோனாவை கவலைக்குரிய கொரோனாவாக உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே பட்டியலிட்டுள்ளது. மத்திய அரசும் இக்கொரோனாவை கவலைக்குரியதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனாவுக்கு மத்தியப் பிரதேசத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், டெல்டா பிளஸ் கொரோனா தொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது தொடர்பாக ராகுல் காந்தி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது குறித்து ராகுல் தனது ட்விட்டர் பதிவில், “டெல்டா பிளஸ் கொரோனாவைக் கண்டறியவும் அதைத் தடுக்கவும் மிகப்பெரிய அளவில் சோதனைகளை நடத்தப்படாதது ஏன்? தற்போதுள்ள தடுப்பூசிகள் டெல்டா பிளஸ் வைரஸுக்கு எதிராகப் பலன் அளிக்குமா? இதுதொடர்பான முழு தரவுகள் எப்போது கிடைக்கும்? கொரோனா மூன்றாம் அலையைத் தடுக்க மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது” எனப் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.