கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் 2020 - 2021 கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான நேர அட்டவணை மற்றும் நடைமுறைகளை உடனடியாக வெளியிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான தகவலை  பாப்புலர் ஃப்ரண்ட் அறிக்கையாக வெளியிட்டுள்ளது அதன் விவரம்:- 

அனைவருக்கும் அடிப்படை கல்வி என்ற நோக்கத்துடன், 2009-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் தான் RTE எனப்படும் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டம். இதன் மூலம்  பல்லாயிரக்கணக்கான  ஏழை, எளிய மாணவ/ மாணவிகள் பயன்  பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நவம்பர் 2011 முதலே இச்சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. தனியார் கல்வி நிறுவனங்களில் 25%  இட ஒதுக்கீட்டை ஏழை  மாணவ, மாணவிகளுக்கு அளிக்க பட வேண்டும் என்பது தான் இச்சட்டத்தின் சிறப்பம்சம். மேலும், இந்த ஒதுக்கீட்டின் படி தனியார் பள்ளிக்கூடங்களில்  சேர்க்கப்பட்ட மாணவ,மாணவிகளின்  கல்வி கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலுத்த வேண்டும். இது போன்ற பல அம்சங்கள் கொண்டுள்ள சட்டமே RTE-2009. 

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 2 தொடங்கி மே 29 க்குள் இதன் நடைமுறைகளை முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவு இருக்கும் நிலையில், இவ்வருடம் கொரோனாவை காரணம் காட்டி இதுவரை எவ்வித அறிவிப்பும் அரசால் அறிவிக்கப்படவில்லை. இதனால் ஏழை, எளிய மாணவர்கள் RTE சட்டத்தின் மூலம் பயன் பெறுவது பாதிக்கப்பட்டுள்ளது. இன்று பல்வேறு தனியார் பள்ளிகளும் தங்களுடைய மாணவர் சேர்க்கையை முடித்துள்ள நிலையில் அரசு முறையாக RTE சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை கவனத்தில் கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு இருந்த போதிலும் கூட கர்நாடகம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எல்லாம் RTE நடைமுறைகளை அறிவிப்பு செய்து செயல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகம் இதுவரை அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே, இது விஷயத்தில் தமிழக அரசு உடனே அறிவிப்பு வெளியிடவும் RTE நடைமுறைப்படுத்துவதை அரசு  உறுதிப்படுத்தவும் வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. 

இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக (RTE) கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 2020 - 2021 கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான நேர அட்டவணை மற்றும் நடைமுறைகளை உடனடியாக வெளியிடக்கோரி இன்று (2020 ஜூலை 28 ) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும், இம்மனுவில் RTE சட்டத்தின் கீழ் இயங்கிவரும் பள்ளிகள், நுழைவு நிலை வகுப்பில் (LKG and 1st STD) குறைந்தபட்சம் 25% இடங்களை ஒதுக்கீடு செய்யக்கோரி இடைக்கால உத்தரவு கோரியும் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் அப்துல் பாசித் அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். என அதில் கூறப்பட்டுள்ளது.