நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்தன. திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். 

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் முழுக்கவே தோல்வி அடைந்து விட்டது. அனைத்து தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா அமோகமாக நடந்தது. ஆனால் வேலுாரில் மட்டும் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். 

அனைத்துக் கட்சிகளும் சரமாரியாக வாக்குக்குப் பணம் வழங்கின. இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி, பழைய கட்சி என எந்த வேறுபாடும் இல்லை. நாம் தமிழர் கட்சி மட்டும் தான், பணத்தை நம்பாமல் மக்களை நம்பிக் களம் இறங்கியது. 

பாஜக எதிர்ப்பு ஓட்டுகளை அறுவடை செய்தது தான் திமுகவின் இந்த வெற்றிக்குக் காரணம். அதேசமயம் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. வரும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி இன்னும் சிறப்பாக செயல்படும். 

இவ்வாறு சீமான் கூறினார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றிருப்பது குறித்து சீமானிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சீமான், “50 ஆண்டுகளாக நடித்து வந்த ஒருவர் புதிதாகக் கட்சித் துவங்கியிருக்கிறார். ஆகவே மக்கள் அவருக்கு வாக்களித்திருக்க வேண்டும்” என்றார்.