24 மணி நேரமும் வேலை செய்யும் காவலர்களுக்கு ஓய்வு தேவை எனவும் காவல் துறையினர் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தால் தமிழகத்தின் நிலை என்ன எனவும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

மன அழுத்தம் காவலர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனிடையே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமைய்ல் குழு அமைக்க 2012 ஜூலையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, 24 மணி நேரமும் வேலை செய்யும் காவலர்களுக்கு ஓய்வு தேவை எனவும் காவல் துறையினர் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தால் தமிழகத்தின் நிலை என்ன எனவும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

குடும்ப விழா, பண்டிகைக்கு காவலர்களுக்கு விடுமுறை அளிப்பதில்லை எனவும் காவல் துறையில் 19 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக செய்திகள் வெளியானதே அது உண்மையா எனவும் கேள்வி எழுப்பினார். 

காவலர் மன அழுத்தத்தை போக்க பரிந்துரை வழங்கும் ஆணையம் அமைக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது ஏன் எனவும் 6 வருடங்களாக உத்தரவை அமல்படுத்தாதால் காவலர்கள் மரணம் அதிகரித்துள்ளதாகவும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார். 

நிபுணர்கள் அடங்கிய ஆணையத்தை அமைப்பது தொடர்பாக மார்ச் 19 க்குள் அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.