தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள லுலு நிறுவனத்தில் வட இந்தியர்களே அதிக அளவில் வேலை செய்வார்கள் எனவும்,  இதனால் வரும்காலங்களில் அரசியல் நிலைப்பாட்டை வட இந்தியர்களே தீர்மானிப்பார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

முதலமைச்சர் துபாய் பயணம்

தமிழக அரசு தொழில் துறையில் முன்னேற்றம் அடைவதற்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக 192 நாடுகள் பங்கேற்கும் துபாய் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு சார்பாக அரங்கம் அமைக்கப்பட்டது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தனி விமானத்தில் துபாய் சென்றது ஏன் என்றும், அந்த விமானத்தில் குடும்ப உறுப்பினர்களை அழைத்து சென்றது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதனை அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வந்தது. இந்த நிலையில், தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனி விமானத்திற்கான அனைத்து செலவையும் திமுகவே ஏற்கும் என கூறியிருந்தார். இதனையடுத்து துபாய் தொழில் முதலீட்டாளர்களோடு ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார். அப்போது லுலு நிறுவனத்தோடு 3500 கோடி ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து தனது பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் துபாய் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக தெரிவித்தார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் விமான செலவையும் திமுக ஏற்க என்ன காரணம்?

இந்தநிலையில் முதலமைச்சர் துபாய் பயணம் தொடர்பாக கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,ஒவ்வொரு தேர்தலின் போதும் 5,000 கோடி வரை செலவு செய்யப்படுவதாக தெரிவித்தவர், தற்போது 6500 கோடி முதலீடு கொண்டு வந்ததாக கூறுகிறார்கள். இது பெரியவர்கள் விளையாட்டு இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார். கப்பலில் வந்தவர்களை விரட்டிவிட்டு, வானூர்தியில் வருபவருக்கு சிகப்பு கம்பளம் விரிக்கிறார்கள் என கூறினார். தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள லுலு மார்கெட் முழுவதும் வட இந்தியவர்கள் தான் வேலை செய்ய போகிறார்கள் என தெரிவித்தார். அரசியலையும் இங்கு உள்ள நிலைபாடுகளையும் வரும் காலங்களில் வட இந்தியர்களே தீர்மானிப்பார்கள் என கூறினார். இது முற்றிலும் பேராபத்தை நோக்கி செல்லும் என தெரிவித்தார். மேலும் துபாய் தனி விமானத்தில் முதலமைச்சர் சென்ற நிலையில் அந்த விமானத்தில் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் துபாய் சென்றதாக தெரிவித்தார். அந்த அரசு அதிகாரிகள் செலவையும் ஏன் திமுக ஏற்க வேண்டும் ? என்கிற கேள்வி எழுவதாக சீமான் தெரிவித்தார்.