செந்தில்பாலாஜியோடு ரகசிய பேரம்.? வேவு பார்க்கும் தலைமை!அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்-பாஜகவில் நடப்பது என்ன?
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பதவியேற்றதில் இருந்து, பல்வேறு புகார்களை கூறிக்கொண்டு கட்சியில் இருந்து தலைமை கழக நிர்வாகிகள் வெளியேறுவது வாடிக்கையாக மாறிவிட்டது. நிர்வாகிகளின் அதிருப்தி பாஜகவின் உட்கட்சி மோதல் எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என எடுத்துக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பாஜக
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு மாநிலத்திலும் அடிப்படை கட்டமைப்புகளை பலப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. தமிழகத்தில் பெரிய அளவில் வாக்கு சதவிகிதம் இல்லாத பாஜகவை வளர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த திட்டமிட்டது. குறிப்பாக மாநில தலைவராக இருந்த தமிழிசைக்கு ஆளுநர் பொறுப்பு வழங்கியது. தமிழகத்தின் சார்பாக மத்திய அமைச்சராக யாரும் இல்லாத நிலையில் எல்.முருகனை பாஜக அரசு மத்திய அமைச்சராக்கியது. இதனையடுத்து தமிழகத்தில் அதிரடி அரசியல் செய்ய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக தேசிய தலைமை நியமித்தது.
வேவு பார்க்கும் தலைமை.?
ஆனால் அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றதில் இருந்து பல்வேறு சச்சரவுகள் தொடர்ந்து நீடித்து வருகிறது. பாஜக மூத்த நிர்வாகிகள் ஹனி டிராப் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்து மிரட்டப்படுவதாக புகார் கூறப்பட்டது. வார்ரூம் அமைத்து கட்சி நிர்வாகிகள் கண்காணிக்கப்டுவதாகவும் விமர்சிக்கப்பட்டது. இதில் பாஜக மூத்த நிர்வாகியான கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்எல்ஏ சரவணன், அண்ணாமலையில் மத அடிப்படையிலான அரசியல் தனக்கு பிடிக்காத காரணத்தால் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
பாராட்டுக்களால் பரவசப்படுவதும் இல்லை.. தூற்றுபவர்களை கண்டு துக்கப்படுவதும் இல்லை - பாஜக
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.?
இதனையடுத்து நடிகை காயத்ரி ரகுராம், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றும், அண்ணாமலை பாஜகவின் மூத்த தலைவர்களை மதிக்கவில்லையென்றும் விமர்சித்து கட்சியில் இருந்து வெளியேறினார். அடுத்ததாக சூர்யாசிவாவிற்கும்- டாக்டர் டெய்சி அருளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் தமிழக பாஜகவை மட்டுமில்லாமல் தமிழக மக்களையே திரும்பி பார்க்க வைத்தது. மிகவும் ஆபாச வார்த்தைகளால் இருவரும் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையில் நம்பிக்கைக்குரியவராக செயல்பட்ட சூர்யா சிவாவும் கட்சியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தநிலையில் பாஜகவின் ஐடி பிரிவு தலைவராக இருந்தசிடிஆர். நிர்மல்குமார் திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.
இரட்டை வேடம் அல்ல, இருபது வேடங்கள் கூடப் போடுவீர்கள்.! திமுகவிற்கு எதிராக சீறும் அண்ணாமலை
'மனநலம் குன்றிய நபரை போல்'
இதனையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கை தான் அதிரி புதிரியாக இருந்தது. அந்த அறிக்கையில், தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம் என குறிப்பிட்டுள்ளார். தொண்டர்களை மதிக்காதது தான்தோன்றி தனம் இவற்றுடன் "மனநலம் குன்றிய" மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது என குற்றம்சாட்டியிருந்தார்.
திரைமறைவில் ரகசிய பேரம்
மேலும் நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்? மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகப்பெரிய கேடு என கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த அறிக்கை பாஜக நிர்வாகிகளை மட்டுமில்லாமல் அரசியல் கட்சியினர் இடையே கடும் அதிரச்சியை ஏற்படுத்தியது.
கனவு நினைவாகுமா.?
ஆனால் இதற்கு பதில் அளித்த அண்ணாமலையோ அன்பு சகோதரர் திரு. நிர்மல் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்’ என்று வாழ்த்தியுள்ளார். பாஜகவில் அடுத்தடுத்த நிர்வாகிகள் விலகுவதற்கு மாநில தலைமை தான் காரணம் என புகார் கூறி செல்கின்றனர். எனவே உட்கட்சி பிரச்சனையை சரி செய்தால் மட்டுமே 2024 ஆம் ஆண்டு நடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலையின் 25 தொகுதி இலக்கு என்ற கனவை நினைவாக்க முடியும், இல்லையென்றால் கனவு தொடர் கனவாகவே மாறிவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்