முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தின் மர்மம் என்னவென்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார், Go Back Modi என்று கூறிய ஸ்டாலின்  மோடி காலில் விழ டெல்லி சென்றுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

அரசு முறை பயணத்தில் குடும்ப உறுப்பினர்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினி டெல்லி பயணம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கைவெளியிட்டுள்ளார், அதில் தமிழ் நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் துபாய்க்கு (இன்பச்) சுற்றுலா மேற்கொண்டார். கடந்த எட்டு மாதமாக துபாயில் நடைபெற்று வந்த கண்காட்சி முடிய 6 நாட்களே இருந்த நிலையில், தமிழக மக்களின் வரிப் பணத்தில் பெருஞ்செலவில் அமைக்கப்பட்ட தமிழக அரங்கை மார்ச் 24 அன்று திறந்து வைத்துள்ளார். பொருட்காட்சியின் நிறைவு நாள் நெருங்கி உள்ளதால், பல அரங்கங்கள் மூடும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள பெருநகரங்களில் ஷாப்பிங் மால்கள் அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். தமிழகத்தில் சிறு வணிகர்கள் நலன் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்று ஆட்சியில் இல்லாதபொழுது ஆர்ப்பாட்டம் செய்த அப்போதைய எதிர்கட்சித் தலைவர், முதல்வரானவுடன், தமிழக வணிகர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். தமிழகத்திற்கு அன்னிய முதலீடுகளைக் கொண்டு வரும் வகையிலான அரசு முறைப் பயணம் என்று தம்பட்டம் அடித்தார். அரசு முறைப் பயணம் என்றால் தனி விமானத்தில் குடும்பத்தோடு சென்றது ஏன் ? என்று கேள்வி எழுப்பினேன். உடனே, உடன் சென்ற அமைச்சர் தங்கம் தென்னரசு, தனியார் விமானச் செலவை தி.மு.க. ஏற்றதாக அங்கிருந்தே அறிக்கை விட்டு மழுப்பினார்.

மோடி காலில் விழ டெல்லி சென்ற ஸ்டாலின்..?

தி.மு.க. செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் அரசு அதிகாரிகள் சென்றது சட்ட விரோதம் என்று மத்திய அரசுக்கு புகார்கள் போயிருக்கிறது. இந்நிலையில் நேற்று (30.3.2022) இரவு, முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் டெல்லிக்கு பறந்திருக்கிறார். திரு. மு.க. ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றாரா? அல்லது முதலீடு செய்ய துபாய் சென்றாரா ? என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பினார்கள். இது குறித்து ஊடகங்களும், நாளிதழ்களும், வாரப் பத்திரிகைகளும் விவாதங்கள் நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளும் பல்வேறு புகார்களை எழுப்பியுள்ளன. ஒரு முதல்வரின் வெளிநாட்டுப் பயண நிகழ்சிகளை அங்குள்ள இந்திய தூதரகம் மேற்கொள்ளாமல், மருமகனும், மகனும் செய்தது ஏன் என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டது. பதவிக்கு வந்த 10 மாத காலத்தில் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ள முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றக் கோரி மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமீத்ஷா ஆகியோரது காலில் விழ, நேற்று இரவு டெல்லி சென்றிருப்பதாக செய்திகள் வருகின்றன. 

மோடியை அவதூறாக விமர்சித்த திமுக

சுமார் 43 ஆண்டுகளுக்கு முன், தன் தந்தை திரு. கருணாநிதி கடைபிடித்த வழியை பின்பற்ற திரு. ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக மக்கள் கேலி பேசுகிறார்கள். "பூலான் தேவி, சேலை கட்டிய ஹிட்லர்" என்றெல்லாம் அன்றைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களை இழிவு படுத்தினார் திரு. கருணாநிதி. சர்க்காரியா கமிஷன் வழக்குகளில் இருந்து தப்பிக்க 1980 களில் "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக" என்று திருமதி இந்திராகாந்தி அவர்களின் காலில் விழுந்தார்.அதே போல், 2019 பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக, கோ பேக் மோடி (Go Back Modi) என்று கருப்பு பலூன் பறக்கவிட்டவர் திரு. மு.க. ஸ்டாலின். தி.மு.க-வினர் மேடை தோறும் பிரதமர் பற்றியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் தரக்குறைவாக விமர்சித்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, "அ.தி.மு.க-வினர் அவர்கள் தலைவியை அம்மா என்றும், மோடியை டாடி என்றும் அழைத்தால், அவர்களுக்குள் என்ன உறவு" என்று, தி.மு.க. எம்.பி திரு. ஆண்டிமுத்து ராசா, தமிழக மக்கள் முகம் சுளிக்கும் வகையில் பேசினார்.

நெருப்பை போன்றவர் மோடி

இதையெல்லாம் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மறந்துவிட்டு, தன்னையும், தன் குடும்பத்தையும் பிரதமர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில், தி.மு.க தலைவரும், முதல்வருமான திரு. ஸ்டாலின், டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
திரு. ஸ்டாலினின் மாய் மாலத்திலும், நாடகத்திலும் மயங்க, நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், இந்திராகாந்தி அம்மையார் அல்ல. சட்ட விரோத பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டு உண்மை என்றால், உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும். ஊழலுக்கு எதிரான, நெருங்க முடியாத நெருப்பைப் போன்றவர் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் என்பதை தி.மு.க-வினர் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை.