சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 6 ஆம் வகுப்பு ஆண்டு தேர்வில் மிகவும் தாழ்ந்த சாதி என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இணையத்தில் வைரலாக பரவும் அந்த கேள்வித்தாள் குறித்து பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் செயல்படும் பள்ளிகளில் தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஆறாம் வகுப்பு தேர்வு வினாத்தாளில்,  இடம் பெற்றுள்ள கேள்வி ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

மத்திய அரசின் கல்வி திட்டத்தின்கீழ் செயல்படும், சிபிஎஸ்இ பிரிவுகளுக்கு என்சிஆர்டி எனப்படும் பாடநூல் அடிப்படையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  அதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

ஆண்டுத் தேர்வின்போது, அந்தந்த பள்ளிகளே வினாத்தாள்களை தயாரித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 6 ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் தேர்வு அண்மையில் நடைபெற்றது. 

இந்த தேர்வில் இடம் பெற்ற கேள்வி ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கேள்வி என்னவென்றால், வர்ணாசிரம முறையில் மிகவும் தாழ்ந்த சாதி என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது. அதற்கு 1. பிராமணர்கள், 2. சூத்திரர்கள், 3.வைசியர்கள், 4.சத்திரியர்கள் என பதில்கள் தரப்பட்டுள்ளன.

இந்த சர்ச்சை கேள்வி இடம் பெற்ற கேள்வித்தாள், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கேள்வித்தாள் எந்த பட்ளளியில் வழங்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.