அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கு அடுத்து அதிகாரமிக்க பதவி அவைத்தலைவர் பதவி தான். முக்கிய முடிவுகளை எடுக்கும் மற்றும் பொதுச் செயலாளருக்கு ஒப்புதல் கொடுக்கும் பொதுக்குழுவை கூட்டம் அதிகாரம் அவைத்தலைவருக்கு மட்டுமே உண்டு. மேலும் அதிமுக இரண்டாக உடைந்து மீண்டும் ஒன்று சேர்ந்த போது அதிமுக என்கிற கட்சிப் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அதிமுகவின் அவைத்தலைவரான மதுசூதனனுக்கு தான் அனுப்பியது. இதன் மூலம் கட்சி, ஆட்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதிக்கம் செலுத்தினாலும் அதிகாரம் மதுசூதனன் வசம் தான் உள்ளது.

அதிமுக இரண்டாக உடைந்து பிறகு சேர்ந்ததை தொடர்ந்து 3 வருடங்களுக்கு முன்னர் அந்த கட்சியின் பொதுக்குழு கூடியது. அதன் பிறகு பொதுக்குழு தற்போது வரை கூடவில்லை. இந்த நிலையில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் அதிமுகவின் பொதுக்குழு எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஏனென்றால் அந்த பொதுக்குழுவில் பேசும் ஜெயலலிதா தேர்தல் வியூகம் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் நிர்வாகிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்துவிடுவார்.


அந்த வகையில் அடுத்த  ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதியில் பொதுக்குழுவை கூட்ட வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. அதோடு மட்டும் இல்லாமல் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதிலும்  அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது. முதலமைச்சர் வேட்பாளரே இல்லாமல் தேர்தல் களத்தை எதிர்கொள்ள முடியாது என்பதில் இபிஎஸ் உறுதியாக உள்ளார். ஆனால் இபிஎஸ்சை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க முடியாது என்பதில் ஓபிஎஸ் பிடிவாதம் காட்டுகிறார். எனவே இந்த விஷயம் குறித்து பொதுக்குழுவை கூட்டி பேசலாம் என்கிற முடிவுக்கு இபிஎஸ் வந்துள்ளதாக கூறுகிறார்கள்.

 

பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தனது ஆதரவாளர்கள் என்று இபிஎஸ் நம்புகிறார். மேலும் ஓபிஎஸ்சை காட்டிலும் அதிமுகவை வழிநடத்த தான் தான் தகுதியானவன் என்று தொண்டர்களை ஏற்க வைப்பதும் சுலபம் என்று இபிஎஸ் காய் நகர்த்துகிறார் என்கிறார்கள். ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் நிலையில் இந்த சூழலில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்று முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்வது எளிது என்பதும் இபிஎஸ் போடும் கணக்கு என்று கூறப்படுகிறது. ஆனால் இவற்றுக்கு எல்லாம் முதலில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.

பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றால் ஓபிஎஸ் சம்மதம் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் ஓபிஎஸ் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். இதே போல் ஓபிஎஸ் சம்மதித்தாலும் பொதுக்குழுவிற்கான அழைப்பு விடுக்கும் அதிகாரம் கட்சியின் அவைத் தலைவரான மதுசூதனன் வசம் தான் உள்ளது. எனவே இவர்கள் இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் சம்மதிக்க வைப்பது சுலபமல்ல என்று இபிஎஸ் உணர்ந்து வைத்திருக்கிறார். எனவே தான் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனை சந்தித்து பொதுக்குழுவை கூட்டுவது குறித்து இபிஎஸ் விவாதித்ததாக சொல்கிறார்கள்.

அதிமுக இரண்டாக உடைந்த போது மதுசூதனன் ஓபிஎஸ் ஆதரவாளராக சென்றார். சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாடாக அவர் ஓபிஎஸ்சை தேடிச் சென்றார். ஆனால் அதிமுக ஒன்றாக இணைந்த பிறகு அவர் தன்னை ஓபிஎஸ் ஆதரவாளராக காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவர் ஓபிஎஸ் ஆதரவாளர் என்கிற முத்திரை வலுவாக விழுந்துவிட்டது. இருந்தாலும் கூட ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, அவரது ஆதரவாளருக்கு பெரம்பூர் தொகுதியில் சீட், மாவட்டச் செயலாளர் பதவி என ஓபிஎஸ் – இபிஎஸ் தாராளம் காட்டி வந்தனர். மதுசூதனன் விவகாரத்தில் இபிஎஸ் சற்று அதிகம் தாராளம் காட்டுவதாகவே சொல்கிறார்கள். அமைச்சர் ஜெயக்குமார் – மதுசூதனன் பிரச்சனை வந்த போது கூட ஜெயக்குமாரை அழைத்து அடக்கி வாசிக்குமாறு முதலமைச்சர் கூறியதாக பேச்சுகள் அடிபட்டது.

இவை அனைத்துமே ஒரு நேரத்தில் தனக்கு மதுசூதனன் ஆதரவு தேவை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனமாக நகர்த்திய காய்கள் என்கிறார்கள். நேற்று மதுசூதனன் – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே நீடித்தன. இந்த 20 நிமிடங்களில் சுமார் 15 நிமிடங்கள் இருவரும் தனியாக பேசியதாக சொல்கிறார்கள். அப்போது தான் பொதுக்குழு கூட்டம், ஓபிஎஸ் என்ன செய்ய வாய்ப்பு இருக்கிறது? அதிமுகவை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி எல்லாம் எடப்பாடி எடுத்துக்கூறியதாக சொல்கிறார்கள். எது எப்படியோ முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பதில் மதுசூதனன் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.