"பொன்பரப்பி சம்பவம், கட்டுக்கதைகளுக்கு எதிரான உண்மைகள் என்ற தலைப்பில் பசுமைத் தாயகம் அமைப்பின் செயலாளர் அருள் தனது முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், பொன்பரப்பியில் வன்னியர்கள் கலவரம் செய்தார்கள், வன்னியர்கள் என்றாலே வன்முறையாளர்கள்' என்கிற ரீதியிலான கட்டுக்கதைகள் மிகத் தீவிரமாக தமிழக ஊடகங்களால் பரப்பப்படுகின்றன.

திமுக மு.க. ஸ்டாலின், கம்யூனிஸ்ட் முத்தரசன், பாலகிருஷ்ணன், மையம் கமலஹாசன், நாம் தமிழர் சீமான், திருமுருகன் காந்தி, எவிடன்ஸ் கதிர், ஜவாஹிருல்லா என்று மிக நீண்ட வரிசையில் நின்று வன்னியர்களுக்கு எதிரான வன்மத்தை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

கூடவே, திமுக தோழமைக்கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 24 ஆம் தேதி வன்னியர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர். 27 ஆம் தேதி எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் கண்டனக்கூட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

இந்த சூழலில் பொன்பரப்பி குறித்து பரப்பப்படும் கட்டுக்கதைகளுக்கு எதிரான உண்மைகளை தமிழக மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

நிகழ்வு 1: 'நூறு மீட்டருக்குள் பானை உடைப்பு'

சிதம்பரம் நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட குன்னம் சட்டமன்றத் தொகுதியின் 281 முதல் 284 வரையிலான வாக்குச்சாவடிகள் பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடியில் இருந்து சுமார் 60 மீட்டர் தொலைவில் இருக்கும் செல்வ விநாயகர் திருக்கோவில் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்களது கட்சி சின்னமான பானையை வைத்து சட்டவிரோதமாக ஓட்டுக்கேட்டனர்.

தேர்தல் நாளில் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்கு சேகரிப்பது குற்றம் என்கிற நிலையில், வாக்காளர்களுக்கு பானையில் மோர் வைத்து கொடுக்கிற சாக்கில், பானைச் சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுள்ளனர்.

இதனை காலை 11 மணியளவில் தட்டிக்கேட்ட அதிமுக கூட்டணியினர் அந்தப் பானையை சாலையில் போட்டு உடைத்துள்ளனர். உடைக்கப்பட்ட பானையின் ஓடுகள் இன்னமும் அதே இடத்தில் தான் கிடக்கின்றன.

நிகழ்வு 2: 'மாற்றுத் திறனாளி மீது தாக்குதல்'

மதியம் சுமார் 2.30 மணியளவில் - பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள கடையில் வேலை செய்யும் மாற்றுத்திறானாளி வீரபாண்டியன் என்பவர் அங்கு சென்ற போது, பானை உடைக்கப்பட நிகழ்வை கூறி, வீரபாண்டியனை விசிகவினர் தாக்கினர். அவருக்கு தலையில் அடிப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் வேலை செய்யும் விசிகவினர் தேர்தலுக்காக பொன்பரப்பிக்கு வந்துள்ள நிலையில் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். குணசீலன் மற்றும் சங்கர் உள்ளிட்டவர்கள் இதில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

நிகழ்வு 3: 'வன்னியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்'

'மாற்றுத்திறானாளியை ஏன் அடித்தீர்கள்' என வன்னியர்கள் சிலர் பொன்பரப்பி அரசு மாணவியர் விடுதிக்கு முன்பாக விடுதலை சிறுத்தைகளை சேர்ந்தவர்களிடம் நியாயம் கேட்டனர். இந்த இடமும் வீரபாண்டியன் தாக்கப்பட்ட இடமும் அருகருகே இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து நியாயம் கேட்ட வன்னியர்கள் மீது கற்களாலும் பீர் பாட்டிலை உடைத்தும் தாக்கினர். சுப்பிரமணியன், கமலக்கண்ணன் ஆகியோர் கடும் காயமடைந்தனர். மண்டை உடைக்கப்பட்டது. வயிற்றில் பீர் பாட்டிலால் குத்தப்பட்டது (காண்க படம்).

நிகழ்வு 4: 'பெண்கள் மீது ஆபாச வன்முறை'

மேற்கண்ட தாகுதல் நடத்தப்பட்ட அதே நேரத்தில் அங்கு கூடியிருந்த பெண்களிடம், விசிகவை சேர்ந்த கந்தன் மகன் கருணாநிதி எனும் நபர் 'அடுத்து எங்கள் தலைவர் திருமாவளவன் தான் எம்.பி., அதன் பிறகு வன்னிய பெண்கள் யாரும் நிம்மதியாக வாழ முடியாது. ஒவ்வொரு வன்னியர் பெண் வயிற்றிலும் சிறுத்தைகளின் கரு உருவாக்குவோம்' என்று சொல்லி ஆபாசமாக திட்டினார்.

நிகழ்வு 5: 'விசிக வன்முறையாளர்களின் தாக்குதல்'

மேற்கண்ட வன்முறை நடந்த இடத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவுக்குள் தேர்தலுக்காக இளைஞர்கள் கூடியிருந்தனர். இரத்தம் வழிந்த நிலையில் சுப்பரமணியன், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் இருப்பதை பார்த்த அவர்கள் அடிப்பட்டோரை காப்பாற்ற ஓடி வந்தனர். அப்போது காலனியில் கூடியிருந்த விசிகவினர் இளைஞர்களை நோக்கி கற்களை வீசினர்.

நிகழ்வு 6: 'வன்முறையாளர்கள் மீது எதிர்த்தாக்குதல்'

தம்மை நோக்கிய கற்களை வீசிய வன்முறையாளர்களை இளைஞர்கள் துரத்திக்கொண்டு சென்றனர். விசிக வன்முறையாளர்கள் அங்குள்ள காலனி குடியிருப்புக்குள் ஓடியதும், அவர்களை துரத்தி சென்றவர்கள் அங்குள்ள வீடுகளை தாக்கினர்.

நிகழ்வு 7: 'காவல்துறை வருகை'

பொன்பரப்பியில் மோதல் நடப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் சிலர் உடனடியாக பாமக துணைப் பொதுச்செயலாளர் வைத்தி அவர்களுக்கு தகவல் அளித்தனர். அவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் அளித்தார். உடனடியாக அருகிலுள்ள பகுதிகளில் இருந்து காவல்துறையினர் அங்கு அனுப்பப்பட்டனர். மோதல் நிகழ்வு தொடங்கிய சுமார் 15 நிமிடத்தில் காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்துவிட்டனர். மோதல் சூழல் கட்டுப்படுத்தப்பட்டது.

-----------------
"இது என்ன விதமான நீதி?"

இவ்வாறாக, நூறு மீட்டருக்குள் சட்டவிரோதமாக ஓட்டு கேட்டவர்கள் விசிகவினர். மாற்றுத்திறனாளியை தாக்கியவர்கள் விசிகவினர். நியாயம் கேட்டவர்களை மண்டையை உடைத்து, பாட்டிலால் குத்தியவர்கள் விசிகவினர். திருமாவளவன் வெற்றிபெற்றால் வன்னியர் பெண்களின் வயிற்றில் தங்கள் கருவை உருவாக்குவோம் என ஆபாசமாக பேசியவர்கள் விசிகவினர். அடிப்பட்டவர்களை காப்பாற்ற ஓடிவந்தவர்கள் மீது கற்களை வீசி தாக்கியவர்கள் விசிகவினர்.

இத்தனை நிகழ்வுகளும் தமிழக ஊடகங்களின், கட்சிகளின், இயக்கங்களின், அமைப்புகளின் கண்களுக்கு தெரியவில்லை. ஆனால், தம்மை கல்வீசி தாக்கியவர்களை துரத்திச் சென்று, அவர்கள் வீடுகளின் ஓடுகளை உடைத்தது மட்டும் தான் தெரிகிறது.

இதனிடையே, மோதல் பரவாமல் தடுத்ததும், காவல் துறையினரை உடனடியாக வரவழைத்து பாதிப்புகள் அதிகமாகாமல் தடுத்ததும் பாமக தான். அந்த பாமகதான் இப்போது மிகப் பெரிய குற்றவாளியாக சித்தரிக்கப்படுகிறது.

குற்றம் செய்தவர்கள் 'அப்பாவிகளாக' சித்தரிக்கப்படுகின்றனர். நியாயத்துக்காக பேசியவர்கள் 'குற்றவாளிகளாக' ஆக்கப்படுகின்றனர்.

பொன்பரப்பியில் வீடுகளின் ஓடுகள் உடைக்கப்பட்டதை நாம் நியாயப்படுத்தவில்லை. உணர்ச்சி வசப்பட்டு மனிதர்கள் ஒன்று கூடும்போது அங்கு வன்முறைகள் நிகழ வாய்ப்பு உண்டு என்பது மனித இயல்பு. அதற்கு சாதி, மதம், இனம், வாழும் இடம் என்கிற எந்த வேறுபாடும் இல்லை. எந்த அடிப்படையில் நடத்தப்பட்டாலும் இத்தகைய வன்முறை தவறுதான். ஆனால், இந்த வன்முறை தூண்டப்பட்ட சூழல் அதைவிட முக்கியமான தவறு ஆகும் என கூறுகிறார்.

மேலும், அறிக்கையில் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் நான் நேரடியாக பொன்பரப்பியில் விசாரித்து அறிந்த தகவல்கள் என குறிப்பிட்டுள்ளார்.