மணல் குவார்களை நடத்திய சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அமைச்சர்கள் பெயர்கள் எல்லாம் இருந்ததே! அதை எடுத்தார்களே! இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். 

அண்மையில், ஆங்கில தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்று ஒரு ரகசிய தகவலை வெளியிட்டது. அதில்,  சேகர் ரெட்டி டைரியில் அமைச்சர்கள் சிலர் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதனை சுட்டிக் காட்டிய திமுக., செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

திமுக.,வின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் மு.க. ஸ்டாலின். அப்போது அவர், சேகர் ரெட்டி டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை தேவை. டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இது விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

முன்னதாக, மணல் குவார்களை நடத்திய வியாபாரப் புள்ளி சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கியப் பக்கங்கள் எனக் கூறி தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்று, சில ஆவணங்களை வெளியிட்டது. அதில் அமைச்சர்களுக்கு சேகர் ரெட்டி வழங்கிய லஞ்சப் பணம் தொடர்புடைய விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

பல கோடி ரூபாய் குவித்தததாகக் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் இருக்கிறார்  மணல் குத்தகைக்காரர் சேகர்ரெட்டி. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்., சில அமைச்சர்கள் மற்றும் சசியின் உறவினர் மகாதேவன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த டைரி வருமான வரித் துறை அதிகாரிகளிடம் சிக்கியிருக்கிறது.கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.