நடந்து முடிந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது. 27 மாவட்ட கவுன்சிலில் அதிமுக- திமுக இரு கட்சிகளும் தல 13 மாவட்டங்களை கைப்பற்றியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இரு கட்சிகளும் தலா 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் அங்கு இழுபறி நீடிக்கிறது. 

 இதுவரை வெளியான ரிசல்டின் படி திமுக 247 மாவட்ட கவுன்சிலர்களையும், 2110 கவுன்சிலர்களையும் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதிமுக 213 மாவட்ட கவுன்சிலர்களையும், 1797 ஒன்றியக்கவுன்சிலர் பதவிகளையும் கைப்பற்றி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.  இந்தக் கட்சிக்கு அடுத்தபடியாக 16 மாவட்ட கவுன்சிலர்களையும், 151 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் பாமக கைப்பற்றி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.  இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 13 மாவட்டக்கவுன்சிலர்களையும், 126 ஒன்றியக் கவுன்சிலர்களையும் பிடித்து நான்காம் இடம்பிடித்துள்ளது.

 

அதற்கடுத்து ஐந்தாவது இடத்தை தேமுதிக பிடித்துள்ளது. அந்தக் கட்சி 4 மாவட்டக் கவுன்சிலர்களையும், 94 ஒன்றிய கவுன்சிலர்களையும் கைப்பற்றியுள்ளது. அமமுக மாவட்டக் கவுன்சிலர் பதவிகளை பிடிக்காவிட்டாலும் 95 ஒன்றியக் கவுன்சிலர்கள் சீட்டைப் பிடித்து 6ம் இடம் பிடித்து அதிசயம் நிகழ்த்தியுள்ளது.

பாஜக 7ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 6 மாவட்ட கவுன்சிலர்கள் பதவியையும், 87 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியையும் கைப்பற்றியுள்ளது. 8ம் இடத்தில் உள்ளது இந்திய கம்யூனிஸ்டு கட்சி. அந்தக் கட்சி 6 மாவட்டக் கவுன்சிலர்கள், 71 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை பிடித்துள்ளது. மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரு மாவட்டக் கவுன்சிலர் 24 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை பிடித்து 9ம் இடத்தில் உள்ளது. 10ம் இடத்தில் மதிமுக உள்ளது. அக்கட்சி 2 மாவட்டக் கவுன்சிலர்கள், 16 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை பெற்றுள்ளது. 

திமுக கூட்டணியில் கடைசி இடத்திலும், மொத்தத்தில் 11வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு ஒன்றிய கவுன்சிலர்,  6 ஒன்றிய கவுன்சிலர் பொறுப்புகளை கைப்பற்றியுள்ளது. நாம் தமிழர் கட்சி முதல் முறையாக பதவியை பிடித்தாலும் ஒரே ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவியை கைப்பற்றி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  சுயேட்சைகள் ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியையும்,  479 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் பிடித்துள்ளனர்.