டெல்லி கலவரம் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார் .  சுமார் மூன்று தினங்களுக்கு மேலாக நீடித்த கொலைவெறி கலவரத்தில் சுமார்  40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மம்தா  இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.  இந்திய குடியுரிமை சட்டத்திற்கு  ஆதரவாகவும் எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது .  இதில் தெற்கு டெல்லியில்  ஜாப்ராபாத் ,  , சீலம்பூர் ,  சாம்பார்க்,  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பிற்கும் இடையே கடும் மோதல் வெடித்தது .  கிட்டதட்ட 4 நாட்களுக்கும் மேலாக நீடித்த வன்முறையில்  பொதுச் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.    

கண்ணில் பட்டதையெல்லாம் வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தினர்.   இந்த கலவரத்தில் இதுவரையில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . நூற்றுக் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் .  இந்த கலவரத்திற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும்   உளவுத்துறையின் படுதோல்வியை கலவரத்திற்கு காரணம் என்றும்  போலீசார் தகுந்த பாதுகாப்பு கொடுக்கவில்லை எனவும் பல்வேறு  விமர்சனங்கள் எழுந்துள்ளன.  இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி , டெல்லி கலவரம் திட்டமிட்ட இனப்படுகொலை என குற்றம் சாட்டியுள்ளார்.  துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அமித்ஷா நடத்திய பேரணியில் தொண்டர்கள் முழக்கமிட்டது சட்டவிரோதம்  என மம்தா கருத்து தெரிவித்தார். அதேபோல்  துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று முழக்கமிட்ட பாஜக தொண்டர்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

முன்னதாக இது குறித்து  கருத்து தெரிவித்திருந்த ஐநா மனித உரிமை அமைப்பின் உயர் ஆணையர்  மீச்சேல் பேச்லட்,  டெல்லி கலவரத்தின் போது  போலீசாரின் செயல் கவலை அளிக்கிறது .   இந்தியாவில் உள்ள அரசால் கொண்டுவரப்பட்டுள்ள  குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் டெல்லியில் கலவரத்தில் போலீசார் செயல் படாமல் வேடிக்கை பார்த்தது  போன்ற செயல்கள் வேதனையளிக்கிறது. இச்சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் அனைத்து சமுதாயத்தைச்  சேர்ந்த பெரும்பாலான மக்கள் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் .  அவர்கள் இந்தியாவின் நீண்டகால மதச்சார்பற்ற பாரம்பரியத்தை ஆதரித்து வருகிறார்கள் .  டெல்லி கலவரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக சில பிரிவினர் தாக்குதல் நடத்திய போதும் போலீசார் பாராமுகமாக செயலற்று நின்றிருக்கிறார்கள் இது மிகுந்த கண்டனத்திற்குரியது.  அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கலவரக்கார ர்கள் தாக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.