அனைவருக்கும் பசு மாடுகள் வழங்கும் திட்டத்தினை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தொடங்கி வைக்கவுள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பன்னீர்செல்வத்தை வழிநடத்தியது, தற்போது அதிமுக ஆட்சியை இயக்குவது என அனைத்துமே டெல்லியின் கட்டுப்பாட்டில் உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

அதை ஒப்புக்கொள்ளும் வகையில் அண்மையில், பிரதமர் மோடிதான் இரு அணிகளும் இணையுமாறு கேட்டுக்கொண்டதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தினை பிரதமர் மோடி தமிழக அரசு சார்பில் தொடங்கி வைத்தார். 

இதற்கு  பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிதி நெருக்கடி நிலையில் தமிழக அரசு உள்ளபோது, எதற்கு மானிய விலை ஸ்கூட்டர் என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் , செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். 

இதைதொடரந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விலையில்லா பசுமாடுகள் வழங்கும் திட்டத்திற்காக மத்திய அரசிடம் 700 கோடி ரூபாய் நிதி பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அனைவருக்கும் பசு மாடுகள் வழங்கும் திட்டத்தினை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.