சஸ்பெண்டுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். 

சஸ்பெண்டுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி தொடங்கியது. அதில் பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடந்த ஒரு வாரம் மக்களவை மற்றும் மாநிலங்களவை முடங்கியது. இந்த நிலையில், நேற்று மக்களவை மீண்டும் கூடியது. அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மதியம் 3 மணிக்கு மீண்டும் அவை கூடியது.

இதையும் படிங்க: ஓபிஆர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால்..! அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்.! தேனியில் ஆர்.பி.உதயகுமார் சவால்

அப்போதும் பதாகைகளுடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அவை செயல்பட விடாமல் அவைத் தலைவரின் இருக்கை முன்பு நின்று பதாகைகள் ஏந்தி அமளியில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 எம்.பி.க்களும் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 4 பேரும் தர்னாவில் ஈடுபட்டனர். மேலும், இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவின் நகலை கிழித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் சும்மா இருக்க மாட்டேன்.. எரிமலையாய் வெடித்த முதல்வர் ஸ்டாலின்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களவை உறுப்பினர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆங்கிலேயர்களை விட கொடுமையான ஆட்சி நடந்து வருகிறது. நான் கிராமத்தில் இருந்து வந்த சாதாரண பெண். இதனால் எங்கள் வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு வாங்கி கொடுக்கிற பால் பொருள்களுக்கு எல்லாம் வரிப்போட்டால். ஒரு ஏழைத்தாய் எப்படி குழந்தைக்கு பால் வாங்கி கொடுக்க முடியும். இந்த இடைநீக்கத்துக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். மக்களை பாதிக்கின்ற விலைவாசி உயர்வை எதிர்த்து நாங்கள் போராடுவோம். போராடிக் கொண்டே தான் இருப்போம் என்று தெரிவித்தார்.