நவீன தமிழகத்தின் சிற்பி பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 112-வது பிறந்த தினத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களைப் போற்றி வணங்குவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஓ.பி.எஸ், ‘’தமிழ் சமுதாயத்தை செம்மைப்படுத்த அயராது பாடுபட்ட  இணையற்ற சமூக  சீர்திருத்தச் செம்மல்; தமிழ்த்தாயின் தலைமகன்; சொல்வன்மையாலும், எழுத்துத் திறத்தாலும் இளைய தலைமுறையை தன்வசப்படுத்திய  செயலாற்றலின் திருவடிவம்.

பல்துறை வித்தகர், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பிறந்த இத்திருநாளில், பேரறிஞர் அவர்களின் நினைவுகளையும், பெருமைகளையும் நினைந்து போற்றி, அவரது லட்சியமான சாதி பேதமற்ற சமநிலை சமுதாயத்தை உருவாக்கிட ஒற்றுமையோடு உழைப்போம் என உறுதி கொள்வோம்’’ என தெரிவித்துள்ளார்.