அரசியல் மேடையில் எதிரொலித்த திரிஷா பெயர்.! விஜய்யை சீண்டிய பாஜக தலைவர்!
சேலத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் விடுத்த அரசியல் சவாலுக்கு பதிலளித்த பாஜகவின் நயினார் நாகேந்திரன், நடிகை திரிஷாவின் பெயரை இழுத்து தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளார். இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விஜய்யை வம்புக்கு இழுக்கும் பாஜக
தமிழக அரசியல் களம் தற்போது 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் சிக்கல்களையும் தாண்டி, தனிநபர் விமர்சனங்களால் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. சேலத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் ஆற்றிய ஆக்ரோஷமான உரையும், அதற்கு பாஜக தரப்பிலிருந்து வந்துள்ள சர்ச்சைக்குரிய பதிலடியும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
சேலத்தில் சீறிய விஜய்: "உங்களால் முடியுமா?"
நீண்ட இழுபறிக்குப் பின் தணிக்கைக் குழுவிற்குச் சென்றுள்ள 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் ஒருபுறம் இருக்க, விஜய் தனது முழு கவனத்தையும் அரசியல் பிரச்சாரத்தில் திருப்பியுள்ளார். இன்று சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் பேசிய அவர், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை நேரடியாகச் சாடினார். “எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை எடப்பாடியும், அண்ணா தொடங்கிய திமுகவை ஸ்டாலினும் வழிநடத்துகிறார்கள். ஆனால், என்னைப் போல துணிச்சலாகப் புதிய கட்சி தொடங்கித் தேர்தலைச் சந்திக்க உங்களால் முடியுமா?” என்று விஜய் விடுத்த சவால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
திரிஷா பெயரை இழுத்த நயினார் நாகேந்திரன்
விஜய்யின் இந்த நேரடித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், யாரும் எதிர்பாராத வகையில் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்துப் பேசினார். விஜய்யின் சவால் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்கையில்: "பாவம் அவர் அனுபவம் இல்லாதவர். முதலில் அவர் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக திரிஷாவிடம் இருந்து அவர் வெளியே வந்தால்தான் உருப்படியாக ஏதாவது நடக்கும்," என்று சர்ச்சையைக் கிளப்பினார்.
அரசியல் நாகரீகம் மீறப்படுகிறதா?
அரசியல் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் விமர்சிக்காமல், ஒரு நடிகையின் பெயரை இழுத்து விஜய்யைத் தனிப்பட்ட முறையில் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளது தவெக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையிலும், அரசியலிலும் இது ஒரு ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்குவதாக பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
'ஜனநாயகன்' படம் விரைவில் வெளியாகும்?
தற்போதைய நிலையில் சென்சார் போர்டுக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ள விஜய்யின் 'ஜனநாயகன்' படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தலைவர் விஜய், திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டியை விஜய் தனது பேச்சில் உறுதிப்படுத்தியுள்ளார். நயினார் நாகேந்திரனின் இந்த 'திரிஷா' குறித்த கருத்து, வரப்போகும் நாட்களில் பெரிய அரசியல் போராட்டங்களுக்கு வழிவகுக்கலாம் என அரசியல் வல்லுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

