திமுக எம்.பி. கனிமொழி கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை, பயிர் காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும். மழைநீர் வடிகால் அமைக்கப்படாத காரணத்தால் மழைநீர் பல பகுதியில் தேங்கும் சூழல் உள்ளது. இதைத் தடுக்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. 
அதிமுகவின் உட்கட்சி பிரச்னை பற்றியெல்லாம் பேச  நான் விரும்பவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று சில ஆலோசனைகளை செய்து சசிகலாவை கட்சியில் சேர்க்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார். இதையெல்லாம் அதிமுகதான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. 
கருணாநிதி, அண்ணா ஆகியோரின் தொண்டர்தான் மு.க.ஸ்டாலின். கருணாநிதியை தலைவராக ஏற்றுக்கொண்டவர் எம்ஜிஆர். ஆகையால் அவர் பெயரை மு.க.ஸ்டாலின் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. அரசியல் லாபத்துக்காக எம்ஜிஆர் பெயரை மு.க.ஸ்டாலின் சொல்லவில்லை. எம்ஜிஆர் திரைப்படங்களை ரசிகராக ரசித்துள்ளேன் என்று மு.க.ஸ்டாலின் சொல்லியுள்ளார். 
ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களைகூட தீர்க்க அதிமுக அரசு தயராக இல்லை. முதலில் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களைத் தீர்க்கட்டும். பின்னர் மற்றவர்கள் மீது விமர்சனங்களை வைக்கட்டும். திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 200 இடங்களுக்கு மேல் திமுக வெற்றி பெறும்” என கனிமொழி தெரிவித்தார்.