We will prepare students for exams of Central Government says Minister KA sengottaiyan...

ஈரோடு

மத்திய அரசு கொண்டுவரும் எந்த தேர்வாக இருந்தாலும் அதைச் சந்திக்கும் வகையில் மாணவர்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபி கரட்டடிபாளையத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு சூறாவளிக் காற்றால் வீடுகளின் கூரைகள் பறந்தன. இதில் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "எந்த இடத்தில் யார் பாதித்தாலும் நிவாரண பணிகளை இந்த அரசு உடனடியாக நேரில் சென்று மேற்கொண்டு வருகிறது. 

மத்திய அரசு கொண்டுவரும் எந்த தேர்வாக இருந்தாலும் அதைச் சந்திக்கும் வகையில் மாணவர்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர். பிளஸ்-2 தேர்வுகள் முடிந்தவுடன் அரசு சார்பில் மாணவர்களுக்கு ஒரு அட்டவணை தரப்பட உள்ளது. 

அதில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள தகுதி தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகள் குறித்து ஆன்லைன் மூலமாக எவ்வாறு விண்ணப்பிப்பது என்ற தகவல் இருக்கும். இதற்காக ஏற்பாடுகளை தமிழக கல்வித் துறையானது செய்து வருகிறது.

மேலும், நம் மாணவர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள். எதையும் சந்திக்ககூடிய திறமை வாய்ந்தவர்களாக உள்ளார்கள். தற்போது பிளஸ்-1, பிளஸ்-2, 10-ஆம் வகுப்பு தேர்வுகளை மாணவர்கள் சிறப்பாக எழுதி வருகின்றனர். இதற்காக கல்வியாளர்கள் பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை" என்று அவர் தெரிவித்தார். 

இந்தப் பேட்டியின்போது சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்துரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்பட பலர் உடனிருந்தனர்.