சபாநாயகர் எங்களை தகுதி நீக்கம் ஏன் செய்யக் கூடாது விளக்கம் கேட்டு நோட்டீஸ், இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், அப்படி கிடைத்தாலும் அதற்கு பதிலளிக்க மாட்டோம் என்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.

நீண்டநாள் இழுபறிக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தது. ஆனால், பன்னீர் அணி சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியது.

அணிகள் இணைப்பின்போது, எம்.பி. வைத்தியலிங்கம் சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இதனால் 19 எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக போர்கொடி தூக்கிவிட்டு தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். 

மேலும், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கடிதம் அளித்தனர்.

இதனால், தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போதைய ஆட்சி நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ள டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள், ஆளுநரின் பதிலை எதிர்பார்த்த நிலையில் உள்ளனர்.

தங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து எம்எல்ஏ வெற்றிவேலிடம் கேள்வி கேட்கப்பட்டது. அது குறித்து பேசிய வெற்றிவேல் எம்எல்ஏ, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவைத்தான் நாங்கள் வாபஸ் பெற்றுக் கொண்டோம்.

அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும் என்பது எங்கள் எல்லோருடைய விருப்பம். ஆளுநரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக காத்து கொண்டிருக்கிறோம்.

சபாநாயகர் எங்களை தகுதி நீக்கம் ஏன் செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸ் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும் அதற்கு பதிலளிக்க மாட்டோம்.