இலங்கையின் இந்த நெருக்கடியான நேரத்தில் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து உதவி செய்யும் இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்றி என அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா நன்றி தெரிவித்துள்ளார். 

இலங்கையின் இந்த நெருக்கடியான நேரத்தில் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து உதவி செய்யும் இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்றி என அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற நாடுகளின் உதவியால் இந்த சூழ்நிலையில் இருந்து நிச்சயம் இலங்கை மீண்டு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தற்சார்பு பொருளாதாரம் இன்மை, பல்வேறு நிர்வாக குளறுபடி காரணமாக இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக அந்நாடு முழுக்க முழுக்க நம்பியிருக்கும் சுற்றுலாத்துறையும் மிகமோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் அந்நாட்டில் வரலாறு காணாத பசி பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

மக்கள் அன்றாட உணவுக்கே அல்லல் படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு பால் பாக்கெட் கூட கிடைக்காத கொடுமை அந்நாட்டில் இருந்து வருகிறது. கையில் பணம் இருந்தாலும் கடைகளில் உணவுப் பொருட்கள் இல்லாததால் மக்கள் வெறுங்கையுடன் திரும்பி வருகின்றனர். பொருட்கள் இருந்தாலும் அதை மக்களால் வாங்க முடியவில்லை, அந்த அளவிற்கு பொருட்களின் விலை நான்கு மடங்கு 5 மடங்கு வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் போராட்டம் கலவரமாக இலங்கை காட்சியளிக்கிறது. அடிப்படை பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். 

எனவே இந்த அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு இந்திய அரசு அவசரகால உதவிகளை அந்நாட்டிற்கு செய்து வருகிறது. எரிபொருட்கள், அடிப்படை உணவுப் பொருட்கள் மற்றும் பொருளாதார ரீதியான பல்வேறு உதவிகளை இந்தியா செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உதவிக்கு அந்நாட்டு மக்கள் நன்றி கூறி வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா, இந்தியாவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், எங்கள் அண்டை நாடான இந்தியா பெரிய அண்ணன் ஸ்தானத்தில் இருந்து எப்போதும் உதவி வருகிறது. இந்திய அரசுக்கும் பிரதமருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், எப்போதும் நாங்கள் இந்தியாவுக்கு நன்றியுடன் இருப்போம், இப்போதுள்ள சூழ்நிலையை தாக்குப் பிடிப்பது மிகவும் கடினம்.

ஆனால் இந்தியா போன்ற நாடுகளின் உதவியால் இந்த கஷ்டமான நிலையில் இருந்து மீண்டு வருவோம் என நம்புகிறோம். இலங்கையில் தற்போது மக்கள் வாழ முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். பல இடங்களில் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது உடலுக்கு மிகவும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த சூழலை முறையாக அரசு எதிர் கொள்ளவில்லை என்றால் மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு தள்ளிவிடும். மக்களும் வன்முறை இன்றி அமைதி வழியில் போராட வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.