சட்டமன்ற தேர்தலில் பாமக போன்ற புதிய கட்சிகளுக்கும் கூட்டணிக்கான கதவுகளை திறந்தே வைத்திருப்பது என்று திமுக மேலிடம் முடிவெடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாமக நிறுவனர் ராமதாசின் 81வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதோடு மட்டும் அல்லாமல் அவரை அய்யா மருத்துவர் ராமதாஸ் என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்திருந்தார் ஸ்டாலின். கடந்த சனிக்கிழமை ஸ்டாலின் – ராமதாஸ் இடையிலான செல்போன் உரையாடல் வழக்கத்தை விட அதிக நேரம் நீடித்ததாக சொல்கிறார்கள். அப்போது கொரோனா, இஐஏ உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ராமதாஸ் சில தகவல்களை ஸ்டாலினிடம் கூறியதாகவும் சொல்கிறார்கள்.

மேலும் பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய மருத்துவ படிப்பு ஒதுக்கீட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு கோருவதற்கு பதில் 27 விழுக்காடு கோரியிருந்தால் எளிதாக பெற்று இருக்க முடியும் என்பது போன் சில விஷயங்களையும் ராமதாஸ், ஸ்டாலினிடம் கூறியதாக சொல்கிறார்கள். வழக்கத்திற்கு மாறான இந்த செல்போன் உரையாடல் இரு கட்சிகளும் நெருங்கி வருவதற்கான ஒரு வாய்ப்பாக கூட இருக்கலாம் என்று சொல்கிறார்கள். கடந்த 2011 தேர்தலில் கடைசியாக திமுக – பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

அதன் பிறகு பாமக, திமுக கூட்டணிக்கு வரத்தயாராக இல்லை. 2014, 2016 மற்றும் 2019 தேர்தல்களில பாமக கூட்டணிக்கு திமுக தயாராகவே இருந்தது. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணியை விரும்பவில்லை. ஆனாலும் இந்த மூன்று தேர்தல்களிலும் பாமகவால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. தங்கள் வாக்கு வங்கியை மட்டுமே அதிகரிக்க முடிந்தது. அதிமுக கூட்டணியில் பாமக எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே கிடைக்கிறது. ஆனாலும் வெற்றி கிடைக்கவில்லை.

இந்த ஒரு காரணத்தை மட்டும் வைத்து பாமகவை சட்டமன்ற தேர்தல் சமயத்தில் திமுக கூட்டணிக்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகின்றன. அதன் முதல்கட்டம் தான் ராமதாசுக்கு ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து கூறியது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு பாமக படு தோல்வி அடைந்தது. இதன் பிறகு யாரும் எதிர்பாராத வகையில் 2011 தேர்தலில் கருணாநிதியை அவர் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து அரை மணி நேரத்தில் கூட்டணி பேச்சை முடித்து திரும்பினார் ராமதாஸ்.

சொலையாக பாமகவிற்கு 30 தொகுதிகள் வழங்கினார் கலைஞர். இந்த தேர்தலிலும் கூட பாமக வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்தே திமுக – அதிமுகவிற்கு மாற்று என முழங்கிய புதிய கூட்டணிகளில் இடம்பெற்றார். 2016ல் பாமக தனித்தே களம் இறங்கியது. ஆனாலும் கூட பெரிய அளவில் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகளை பாமகவால் பெற முடியவில்லை. இதனால் மறுபடியும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு சென்றது பாமக. எனவே 2021 தேர்தலில் பாமகவை எப்படியும் திமுக கூட்டணிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று முயற்சிகள் துவங்கியுள்ளன.

2021 சட்டமன்ற தேர்தல் மிக கடுமையானதாகவும் அதே சமயம் சொற்ப வாக்குகள் கூட வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதால் பலமான கூட்டணி அமைப்பது அல்லது அதிமுக கூட்டணியை பலவீனப்படுத்துவது என்கிற வியூகத்துடன் பாமகவை திமுக அணுகலாம் என்கிறார்கள்.