சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பிப்ரவரி மாதம்தான் முடிவு செய்யப்படும் என பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார். வன்னியர்களுக்கு கல்வி , வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வேண்டி பாமக சார்பில் நடைபெற்ற இரண்டாம் கட்டப் போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். 

கல்வி  , வேலைவாய்ப்பில் வன்னியர் சமூகத்திற்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக சார்பில் இரண்டாம் கட்டப் போராட்டம்  இன்று நடைபெற்றது.  தமிழகம் முழுவதுமுள்ள 12, 621 கிராம நிர்வாக அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்குமாறு கட்சியின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் அமைந்தகரை வட்டாட்சியரகத்தில் பாமக மாநிலத் தலைவர்  ஜி.கே.மணி 12,300 நபர்களின் கையெழுத்துகள் இடம் பெற்றிருந்த மனுக்களை வருவாய் ஆய்வாளரிடம் வழங்கினார். மேலும் இக் கோரிக்கை மனுக்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் முதலமைச்சரின் பார்வைக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் பாமகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

முன்னதாக கோரிக்கை முழுக்கங்களை எழுப்பிய பின்னர் செய்தியாளர்களை சந்தத்த ஜி.கே. மணி பேசியதாவது, "தமிழகம் முழுவதும் இன்று 12, 621 கிராம நிர்வாக அலுவலகங்களில் பாமக , வன்னியர் சங்கம் சார்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டி மனு அளிக்கப்பட்டது. மக்கள் தொகையில் 25 விழுக்காட்டிற்கு மேல் இருக்கும் வன்னியர்கள் அண்மையில் நியமனம் செய்யப்பட்ட நீதிபதி, துணை ஆட்சியர் நியமனங்களில் இடம்பெறவில்லை. பெரும்பான்மை சமூக வன்னியர்கள் முன்னேறாமல் தமிழகம் முன்னேறாது . தேர்ச்சியில்  பின்தங்கிய மாவட்டங்கள் வன்னியர் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்கள், மூன்று தலைமுறையாக 71 விழுக்காடு குடிசை வாழ் மக்களாக  வன்னியர்கள் இருக்கிறோம். அரசுக்கும் , கட்சிகளுக்கும் , பிற சமூகங்களுக்கு எதிரான போராட்டமல்ல இது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க வேண்டுமென 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக சார்பில் கூறி வருகிறோம்.

 

தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணையம்  சாதி வாரி கணக்கெடுப்பு, மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்த உண்மை நிலை அறிய அமைக்கப்பட்டது என பலவாரியாக கூறுகின்றனர். அதே நேரத்தில்  தேர்தலுக்குள் சாதி வாரி கணக்கெடுப்பை இந்த ஆணையத்தால்  நடத்தி முடிக்க முடியாது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் உள்ள தகவல்களைப் பெற்று வன்னியர்களுக்கு உடனடியாக 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சனநாயக நாட்டில் ரஜினி உட்பட யார் வேண்டுமானாலும் கட்சி்  தொடங்கலாம், கூட்டணி தொடர்பாக பாமக இன்னும் முடிவு செய்யவில்லை. பிப்ரவரிக்கு மேல்தான் டாக்டர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு , பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்", என்றார்.