சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசி வரும் திமுகவை ஒழிக்கணும்.. அண்ணாமலை ஆவேச பேச்சு..!
திமுக காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த போதிலும் 2014 ஆம் ஆண்டு வரை வெறும் ஐந்து மருத்துவக் கல்லூரிகளையே தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, கொலை கொள்ளை என கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு அவல ஆட்சி நடந்து வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட அல்லிநகரம் பகுதியில் தன்னுடைய நடை பயணத்தை மேற்கொண்டு பங்களா மேட்டில் தன்னுடைய பயணத்தை நிறைவு செய்தார். பின்னர் நிறைவு விழாவில் பேசிய அண்ணாமலை;- தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசாங்கம் 11 மருத்துவக் கல்லூரிகளை வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 150 இடங்கள் வரை தமிழக மாணவ மாணவியர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார். ஆனால் திமுக காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த போதிலும் 2014 ஆம் ஆண்டு வரை வெறும் ஐந்து மருத்துவக் கல்லூரிகளையே தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
மத்திய அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கியதன் மூலம் அவர்களுக்கான அரசியல் அங்கீகாரத்தை பிரதமர் மோடி வழங்கினார். இளைஞர்கள், பெண்கள் தொழில் முனைவோர்கள் சாலையோர வியாபாரிகள், தனி நபர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, கொலை கொள்ளை என கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு அவல ஆட்சி நடந்து வருகிறது.வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் சனாதானத்தை ஒழிப்போம் என்று பேசி வரும் திமுகவை ஒழிக்க அனைவரும் சூளுரைக்க வேண்டும் எனவும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.