we said lie on Jayalalithaa issue Minister Confession

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரை நாங்கள் பார்த்ததாகவும் அவர் இட்லி சாப்பிட்டதாகவும் கூறியது “பொய்” என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் ஜெயலலிதாவைப் பார்த்ததாகவும் அவர் உடல்நலம் தேறிவருகிறது எனவும் தெரிவித்தனர். மேலும் அவர் இட்லி சாப்பிட்டார் எனவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அவரது மரணத்திற்கு சசிகலாதான் காரணம் எனவும் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனவும் கட்சியிலிருந்து பிரிந்துசென்ற பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தினர். அதற்கு முதல்வர் பழனிச்சாமி அணியினர் மறுப்பு தெரிவித்தனர்.

முதல்வர் பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்த பிறகு அமைச்சர்கள் அந்தர்பல்டி அடித்தனர். மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவைப் பார்த்ததாக கூறிய அமைச்சர்கள், தற்போது அதை மறுக்கின்றனர். சசிகலா மட்டும்தான் ஜெயலலிதாவை பார்த்ததாகவும் மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதாவின் மரணத்திற்கு சசிகலாதான் காரணம் எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த முரண் கருத்துக்களுக்கு அமைச்சர்களில் மிகவும் பெயர்போனவராக இருப்பவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அண்மையில் திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் பேசிய சீனிவாசன், ஜெயலலிதாவிற்கு முறையாக சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில், மதுரையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்ததாகவும் அவர் இட்லி சாப்பிட்டதாவும் பொய் கூறியதாக தெரிவித்தார். மேலும் சசிகலாவைத் தவிர மற்ற யாரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை எனவும் அப்போது கூறிய பொய்க்காக மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.