அதிமுகவில் 12 ஆயிரத்து 524  பேர் பதவி வகித்து வரும் அனைத்து ஊராட்சி கழக செயலாளர் பொறுப்புகள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டு விரைவில் மாற்று பொறுப்பு வழங்கப்படும் என ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 

அதிமுக கட்சியின் ஊராட்சி கழக செயலர் பொறுப்புகளை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ள துணை முதல்வர் ஓபிஎஸ், ஐடி பிரிவில் துணை நிர்வாக பொறுப்பில் பணியாற்றியவர்களையும் நீக்கியுள்ளார். அதுகுறித்த அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட மென்னேற்ற கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியக் கழக அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ஊராட்சி கழக செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது.


ஊராட்சி கழக செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் விரைவில் மாற்று பொறுப்பு வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை, கோவை, வேலூர், மதுரை என நான்கு மாவட்டங்களாக அதிமுக ஐ.டி. பிரிவு பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை- அஸ்பயர் சாமிநாதன் வேலூர்- கோவை சத்யன், கோவை - ஜி.ராமச்சந்திரன், மதுரை - வி.வி.ராஜ்சத்யன் ஆகியோர் பொறுப்பாளராக நியமனக்கப்பட்டு உள்ளனர். 

இந்த அதிரடி பதவி பறிப்பு இதுவரை எந்தக் கட்சியும் கண்டிராத ஒன்று. ஒட்டுமொத்தமாக ஒரு கட்சி 12 ஆயிரத்து 524  பேர் பதவிகளை பறித்து இருப்பது இதுவே முதல் முறை. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த அசைண்மெண்டை கையில் எடுத்து இருக்கிறது அதிமுக தலைமை. கிளைச்செயலாளர் பதவி என்பது எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே உருவாக்கப்பட்ட பதவி, ஊராட்சி கழக செயலாளர் பதவியை உருவாக்கியவர் ஜெயலலிதா. 

ஜெயலலிதா காலத்தில் ஸ்திரத்தனமையோடு பதவி வகித்தவர்கள், அவரது காலத்திற்கு பிறகு அதிமுக உடைந்த பின் கட்சி மாற்றி மாறி சென்று தாய் கழகத்திற்கு திரும்பியதால் பதவிகளை கொடுப்பதில் அதிமுகவுக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. இதனால் அதிமுகவில் மேல் மட்டும் முதல் கீழ்மட்ட பதவிகள் என ஒரு லட்சம் பதவிகள் காலியாகவே இருந்தது. இந்தப்பதிவிகள் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே நிரப்பப்பப்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது அதிமுக தலைமை. அத்துடன் ஏற்கெனவே இருக்கும் பதவிகளில் சரியாக செயலாற்றாதவர்களை களைந்து விட்டு செல்வாக்கான புதியவர்களை நியமிக்கவும் திட்டமிட்டு வந்தனர்.

 

ஊராட்சி தலைவர் பதவிகளை பொறுத்தவரை விரைவில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி பழைய பொறுப்பு வகித்த வயதானவர்கள், சரியாக செயல்படாதவர்கள் லிஸ்டை எடுத்து அவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமித்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி சட்டமன்றத் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது அதிமுக தலைமை. அடிமட்டத்தில் இருந்து கட்சியின் பராமத்து பணியை தொடங்கி இருக்கும் அதிமுகவின் இந்த மூவ் எதிர்கட்சிகளை வாயடைக்கச் செய்துள்ளது.