சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்த போதும் கணிசமான வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இதுவரை வெற்றிபெற்றதே இல்லை. கடந்த மக்களவை தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றதால் நாம் தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடும் அளவிற்கு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரே ஒரு கவுன்சிலர் சீட்டை மட்டுமே பிடித்தது.  நாம் தமிழர் கட்சியை சேர்ந்த குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஒன்றிய 11 வது வார்டில் சுனில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி அக்கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

ஒரே ஒரு வெற்றி என்றாலும் இது நாம் தமிழகர் கட்சிக்கு முதல் வெற்றி. சீமானின் தம்பிகள் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் வெற்றி பெறவில்லை என்ற போதிலும், வார்டு, ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவியில் பல  இடங்களை வென்றுள்ளன.  அந்த வரிசையில், சிவகங்கை மாவட்டம்-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுந்தர்ராசு ஜெயங்கொண்டான் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். 

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் மானாங்குடி ஊராட்சி தலைவராக நாம் தமிழர் கட்சி உறுப்பினர் பரமேஸ்வரி பத்மநாபன் வெற்றி பெற்றுள்ளார்.  மாதவரம் தொகுதி, சோழவரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரக்காடு ஊராட்சி தலைவராக நீலா வெற்றி பெற்றுள்ளார். கிருஷ்ணகிரி நாம் தமிழர் வேட்பாளர் ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சி தலைவராக சுரேஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி கெங்கப்பராம்பட்டி ஊராட்சி தலைவராக வெங்கடேஷ்(எ)வெங்கிநிலா, கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி தலைவர் அ.ராசா அரங்கூர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் பல ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவியை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.