சசிகலா வெளியே வந்தால் முதலில் மகிழ்ச்சி அடைவது அவர்கள் குடும்பம்தான். சசிகலா வெளியே வராவிட்டால் முதலில் வருத்தம் அடைவதும் அவர்கள் குடும்பம்தான். எங்களுக்கு எந்த மகிழ்ச்சியோ.! வருத்தமோ.! இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் அரசியல் களத்தில் அடுத்த அனலை கிளப்பியிருக்கிறார்..

சொத்துக்குவிப்பு வழக்கு தண்டனை ஜெயலலிதா மரணத்திற்கு பின் வாசிக்கபட்டதால் அதில் இடம் பெற்றிருந்த குற்றவாளிகள் பட்டியலில் சசிகலா பெயரும் இடம் பெற்றிருந்தது. எனவே சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு வருடங்களாக இருக்கிறார் சசிகலா. அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வெளிவந்தது. பின்னர் ஆகஸ்ட் 28ம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வந்தது. உண்மையில் , சசிகலாவுக்கான 10 கோடி ருபாய் அபராத தொகையினை இன்னமும் கட்டாமல் இருப்பதாகவும், அதைக் கட்டி முடித்தவுடன் தான் சசிகலாவின் விடுதலை குறித்து சிறைத்துறை அறிவிக்கும் என்றும் சொல்லப்பட்டது.

 பணம் கட்டச்சொல்லி சிறைத்துறை இன்னும் கடிதம் கொடுக்கவில்லை. இதற்கிடையில்  அபராத தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு சசிகலா அவரது வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியிருந்ததாக தகவல்கள் வெளியானது. நான் அப்படியெதுவும் சொல்லவில்லையென வழக்கறிஞர் மூலமாக கடித்தின் வழியாக மறுத்திருந்தார் சசிகலா. இந்நிலையில் இன்னும் ஒருவாரத்தில் சசிகலா சிறையிலிருந்து வெளியேற வாய்ப்பிருப்பதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்திருந்தார்.

   சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலா விடுதலை தாமதத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சசிகலா வெளியே வந்தால் முதலில் மகிழ்ச்சி அடைவது அவர்கள் குடும்பம்தான். சசிகலா வெளியே வராவிட்டால் முதலில் வருத்தம் அடைவதும் அவர்கள் குடும்பம்தான். எங்களுக்கு எந்த மகிழ்ச்சியோ.! வருத்தமோ.! இதில் இல்லை” எனக் கூறினார்.