அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும் தோல்வியை சந்திக்கும் என்றும் மோடி மீண்டும் பிரதமர் ஆக முடியாது, ஆக விட மாட்டோம் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தெலுங்குதேசம் கட்சியின் மாநாடு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்றது.. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபுநாயுடு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது , அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக  தோல்வியை சந்திக்கும் என்றும்  அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது என்றும் கூறினார். பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் பதவிக்கு வருவதாக கனவு காண்கிறார். ஆனால் அது  ஒருக்காலும் நடக்காது என நாயுடு தெரிவித்தார்..

பாஜக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் அக்கட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாது என்றும் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

தற்போது எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. ஆனால் அக்கட்சியாலும்  ஆட்சியை பிடிக்க முடியாது என தெரிவித்த சந்திர பாபு நாயுடு,  கடந்த 1996–ம் ஆண்டு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தது தெலுங்குதேசம் கட்சி தான். அதே போன்று வருகிற 2019–ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைய தெலுங்குதேசம் கட்சி தான் ‘கிங்மேக்கராக’ இருக்கும் என் நாயுடு கூறினார்..

எதிர்க்கட்சிகள் பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும என்றார்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லது நடக்கும் என்று நினைத்து தான் பணமதிப்பிழப்பு பிரச்சினையில் நாங்கள் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்தோம். ஆனால் மத்திய அரசால் வங்கிகள் திவாலாகி உள்ளது. வங்கி அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். சரக்கு சேவை வரியை அமல்படுத்துவதிலும் மத்திய அரசு தோல்வி அடைந்து உள்ளது என சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்..