we do not afraid of income tax raid said dinakaran advocate
வருமான வரித்துறை சோதனை நடத்தினால் அஞ்சி நடுங்கி மோடியிடம் அடைக்கலம் அடைய மாட்டோம் எனவும் எதையும் சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளதாக தினகரன் தரப்பு வழக்கறிஞர் காசிநாத பாரதி தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை முதல், ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லம், மன்னார்குடியில் உள்ள தினகரன் இல்லை, சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீடு, போயஸ் கார்டன், கோடநாடு பங்களா, சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு என சசிகலாவுக்கு தொடர்புடைய அனைவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

போலி நிறுவனங்களை தொடங்கி அவற்றின் பெயரில் நஷ்ட கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பிரதமர் மோடி தான் வருமான வரித்துறையை ஏவிவிட்டு சோதனை நடத்துவதாக தினகரன் தரப்பு வழக்கறிஞர் காசிநாத பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரித்துறை சோதனை இப்படி நடக்கவேண்டிய அவசியமில்லை. வருமான வரி ஏய்ப்பிருந்தால், முறையாக நோட்டீஸ் அனுப்பியிருக்கலாம். ஆனால், அப்படிச செய்யவில்லை. வருமான வரித்துறை என்பது சுந்திரமாகச் செயல்படும் அமைப்பு என்று நினைத்திருந்தோம். ஆனால், இது பிரதமர் மோடியின் இன்னொரு அரசியல் பிரிவுதான் என்பது இந்த சோதனைகளிலிருந்து தெளிவாகிறது.
மத்திய அரசுக்கு எதிராக பேசுவோர் மீதும் செயல்படுவோர் மீதும் வருமான வரித்துறை ஏவிவிடப்படுகிறது. அப்படித்தான் நடிகர் விஷால் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் நடந்த சோதனையில் வருமான வரித்துறை என்ன கண்டுபிடித்தது என்பது தெரியவில்லை. வருமான வரி துறை சோதனை நடத்தினால் மிரண்டு போய் பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் போல அடைக்கலம் அடைய மாட்டோம். நேர்மையாக செயல்படும் நாங்கள், எதையும் சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு தினகரன் தரப்பு வழக்கறிஞர் காசிநாத பாரதி தெரிவித்துள்ளார்.
