கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டால்  இங்கு துணைவேந்தர் வந்து நிற்கிறாரே என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவரருமான  கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்ட ஆண்டுகளாக துணை வேந்தர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா என்பவரை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் எத்தனையோ சிறந்த கல்வியாளர்கள் இருக்கும்போது கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை ஏன் துணை வேந்தராக நியமிக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கிண்டல் செய்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் , தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக பெரும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கமல் மத்திய, மாநில ஆட்சியாளர்களை கிண்டல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.