தமிழக மக்களை கொச்சைப்படுத்திய விவகாரத்தில் கிரண்பேடி பணிந்து மன்னிப்பு கோரியதற்கு திமுக தந்த அழுத்தமே காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை சைதாப்பேட்டையில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தொடங்கி வைத்த பேசிய மு.க.ஸ்டாலின், ’ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய வேலையை எதிர்க்கட்சியான திமுக செய்கிறது. தண்ணீர்ப் பஞ்சம் குறித்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும் அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்தார். 

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியில் முதல் நகரமாக மாறியுள்ளது. இதே நகரம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ளத்தில் முழ்கியது. மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவற்றால் வறட்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகு முறையும் கூட இதெற்கெல்லாம் காரணமாக உள்ளது என பதிவிட்டிருந்தார்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழக மக்களை வரலாறு தெரியாமல், சுயநலமிகள் என்றும் கோழைத்தனமான அணுகுமுறை கொண்டவர்கள் என்றும் விமர்சித்த கிரண்பேடி மீது தமிழக மக்கள் மட்டுமல்லாது அரசியல் கட்சிகளும் கொதிப்படைந்தன. தமிழக சட்டசபையில் திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து தனது கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதிமுகவும் கிரண்பேடிக்கு பதிலடி கொடுத்திருந்தது. தண்ணீர் பிரச்சனை விவகாரத்தில் தமிழக மக்கள் பற்றி கூறிய கருத்துக்கு, ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசிடம் வருத்தம் தெரிவித்தார் என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார்.