We are not supportive of the chief ... but - Jayananth

திவாகரன் - தினகரன் மோதல் முற்றிய நிலையில், இருவரும் வார்த்தைகளால் கடுமையாக தாக்கிக் கொண்டனர். திவாகரனும் - தினகரனும் தனித்தனியாக கட்சி ஆரம்பித்து விட்டனர். இந் நிலையில், ஈ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்.-ஐ விட பெரிய துரோகி தினகரன்தான் என்று திவாகரன் கூறியிருந்தார். இதற்கு தினகரன், திவாகரனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டுத என்றும் அவர் கூறுவதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அண்மையில் பேசியிருந்தார். 

இந்த நிலையில், திவாகரனின் மகன் ஜெயானந்த், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவை மீட்டுவிடுவேன் என்று டிடிவி தினகரன் கூறுவது முட்டாள்தனம் என்று கூறினார்.

யார் காணாமல்போவார்கள் என்பதை காலம்தான் முடிவு செய்யும். சசிகலா சிறைக்கு செல்லுமுன் அதிமுகவை டிடிவி தினகரன் கையில் கொடுத்துச் சென்றார். ஆனால், அவர் கொடுத்த அதிமுகவை காப்பாற்ற தினகரன் தவறிவிட்டார். 

முதலமைச்சர் எடப்பாடிக்கு நாங்கள் ஆதரவானவர்கள் அல்ல. அதே சமயம் எடப்பாடி தலைமையிலான ஆட்சியைக் கெடுக்கக் கூடாது என்று சசிகலா எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார்.

நடிப்பின் மூலம் நல்ல தலைவர் என்ற பெயரை தினகரன் எடுத்துள்ளார். தினகரன் ஆதரவாளர்கள் தானாகவே எங்கள் பக்கம் வருவார்கள். சக மனிதனுக்கு தர வேண்டிய மரியாதை டிடிவி தினகரன் அணியிடம் இல்லை.

நாங்கள் ஒற்றுமையாகவே இருந்தோம். தினகரன் தரப்புதான் பிரிவு உண்டாக்கினர். தங்கள் அணிக்கு விரைவில் பலர் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தினகரன் சொல்வதை வெற்றிவேல் செய்கிறார். 

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி குறைபாடுகள் உள்ள ஆட்சிதான். எடப்பாடி அரசு குறைபாடு அல்ல ஆட்சிதான் குறைபாடு என்று ஜெயானந்த் கூறினார்.