Asianet News TamilAsianet News Tamil

திமுக கூட்டணி கட்சிகள் போல நாங்கள் அடிமைகள் அல்ல... அண்ணாமலை கடும் விமர்சனம்!!

அன்னூரில் விவசாய நிலங்களை எடுக்க முயன்றால், சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் செய்வேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

we are not slaves like dmk alliance parties says tamilnadu bjp president annamalai
Author
First Published Dec 7, 2022, 8:43 PM IST

அன்னூரில் விவசாய நிலங்களை எடுக்க முயன்றால், சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் செய்வேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கோவை அன்னூர் - ஓதிமலை சாலையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துக்கொண்டு பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவினர் கொள்ளைபுறமாக வருவது வழக்கம். அப்படித்தான் அன்னூர் பகுதியில் 3867 ஏக்கர் நிலத்தை சிப்காட்டிற்கு எடுப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளனர். திமுகவினர் வியாபாரம் செய்ய, அரசியல் இலாபம் பெற சென்னை வந்தவர்கள். சொந்த உழைப்பில் சம்பாதித்து சாப்பிட்டு இருந்தால் மானம், ரோசம் இருக்கும். அது விவசாயிகளிடம் உள்ளது. விவசாயிகள் பற்றி புரிந்து கொண்டவர் காமராஜர் மட்டுமே. அணை கட்டி பல இடங்களில் விவசாயிகளை வாழ வைத்தவர். அன்னூரில் தரிசு நிலமென சொல்லி விவசாய நிலத்தை கையகப்படுத்துகிறார்கள். அடிமுட்டாள்கள் சேர்ந்து கோபாலபுரத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். அன்னூர் விவசாயிகள் பணக்காரர்களாக வேண்டும் என விரும்பவில்லை என்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு கணக்குப்படி 48195 ஏக்கர் நிலம் தொழிற்சாலைகள் அமைக்க கையக்கப்படுத்தப்பட்ட நிலங்கள் உள்ளது. ஆனால் அங்கு தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை.

இதையும் படிங்க: சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

நாங்குநேரியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்திய போதும், அங்கு ஒரு நிறுவனம் கூட வரவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டிற்கு 27 ஆயிரம் கோடி அந்நிய முதலீடு வந்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லியை விட தமிழ்நாட்டிற்கு வந்த அந்நிய முதலீடு குறைவு. அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? திமுக பித்தலாட்டம் செய்கிறது. தண்ணீரை வியாபாரம் செய்ய படையெடுத்து வந்துள்ளனர். திராவிட மாடல் அரசிற்கு தேவை உங்கள் நிலம் அல்ல. தண்ணீருக்காக தான் வருகிறார்கள். ஜி ஸ்கொயர் என்ற ஆளுங்கட்சி நிறுவனம் அரபு நாடுகளுக்கு சென்று 578 கோடி பணம் கொடுத்து ரேகிண்டோவிற்கு சொந்தமான பேரூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள நிலத்தை வாங்கியுள்ளார்கள். திமுகவின் பாதி பணம் ஜி ஸ்கொயருக்கு தான் செல்கிறது. ஜி ஸ்கொயருக்காக தான் திமுக வேலை செய்து கொண்டுள்ளது. ரேசன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, இன்னொரு புறம் டாஸ்மாக் திறந்து வைப்பது தான் திராவிட மாடல் அரசு.

இதையும் படிங்க: டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் வேண்டும்.. அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு !!

நிலங்களை அபகரித்து விவசாயிகள் வாழ்வாதாரம் அழித்து ஜி ஸ்கோயர் போன்ற நிறுவனத்துக்கு நிலத்தை எடுத்து தருகிறார்கள். விவசாயிகள் பற்றி முதலமைச்சர் கவலைப்படவில்லை. அன்னூரில் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டோம். அன்னூரில் விவசாய நிலங்களை எடுக்க முயன்றால், சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் ஆரம்பிப்பேன். எத்தனை நாட்களாக இருந்தாலும் உயிர் இருக்கும் வரை ஒரு பிடி மண்ணை எடுக்க முடியாது. தைரியம் இருந்தால் ஒரு பிடி மண்ணை எடுத்து பார். மானமும், ரோசமும் இருக்கும் அரசிற்கு ஒழுங்காக பேசினால் புரியும். இந்த அரசிற்கு ஈகோ அதிகம். இது மக்களுக்கான அரசல்ல. கார்ப்பரேட்களுக்கான அரசு. திமுக கூட்டணி கட்சிகளை போல நாங்கள் அடிமையல்ல. திமுக கூட்டணி கட்சிகள் அடிமைகள். பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து அனைவருக்கும் பயம் வந்து விட்டது. எத்தகைய தாக்குதலை திமுக தொடுத்தாலும் 2024 தேர்தலில் 25 எம்.பி.க்களை பெற போவது உறுதி. சிறைக்கு செல்ல பாஜக தொண்டர்கள் பயப்பட மாட்டோம் என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios