நாங்கள் யாருடைய கைப்பாவையும் அல்ல; எல்லை தாண்டிய பயங்கரவாதம் காஷ்மீருக்குள் ஆயுதம் தாங்கிய நபர்களை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நீக்கியது. மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் செயல்படும் 6 பிரதான கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் மற்றும் 3 கட்சிகள் இணைந்து கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி ஒரு தீர்மானம் நிறைவேற்றின. இதில், அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370 சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டு வருவது, இரு யூனியன் பிரதேசங்களாக இருப்பதை மீண்டும் மாநிலமாக மாற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் "குப்கார் தீர்மானம் - என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.


இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தத் தீர்மானம் சாதாரண ஒன்றல்ல. முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் என குறிப்பிட்டுள்ளார்.குரேஷியின் கருத்து தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா கருத்து தெரிவித்தபோது, "ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளை குற்றம்சாட்டுவதே பாகிஸ்தானின் வழக்கம். ஆனால் தற்போது திடீரென அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். புதுடெல்லியோ அல்லது எல்லைக்கு அப்பால் உள்ள யாருடைய கைப்பாவையாகவும் நாங்கள் இல்லை. ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்களுக்கு பதில் சொல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அவர்களுக்காகப் பணியாற்றுவோம்.எல்லை தாண்டிய பயங்கரவாதம் காஷ்மீருக்குள் ஆயுதம் தாங்கிய நபர்களை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து எங்கள் உரிமைக்காக அமைதியாகப் போராடுகிறோம். அமைதி ஒப்பந்தம் மீறப்பட்டு, எல்லையின் இருபுறமும் எங்கள் மக்கள் கொல்லப்படுகின்றனர். இதனை நிறுத்த வேண்டும்.