Asianet News TamilAsianet News Tamil

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டிய நிலையில் உள்ளோம் - தம்பிதுரை பேட்டி

We are in a position to respect the Supreme Court verdict Thambidurai
 We are in a position to respect the Supreme Court verdict Thambidurai
Author
First Published Aug 22, 2017, 4:51 PM IST


நீட் தேர்வில் இருந்த தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்களிக்க மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கியபோதும், உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளித்து செயல்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. தமிழக அரசின் முன் வரைவுக்கு மத்திய அரசின் 3 துறைகள் அனுமதி அளித்தது. 

இந்த நிலையில், நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று சிபிஎஸ்இ மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது, மத்திய அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர், தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று கூறினார். மத்திய அரசு கூறியதைத் தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வு
அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வு அடிப்படையிலேயே கலந்தாய்வு உடனே தொடங்க வேண்டும் என்றும் செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. 

நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தமிழக மாணவர்கள் வேதனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாளை மறுநாள் மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும், நாளை பிற்பகல் தரவரிசைப் பட்டியல்
வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. தமிழக மாணவர்களின் நலன் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். 

கூட்டாட்சி தத்துவப்படிதான் உரிமையைப் பெற தமிழக அரசு தொடர்ந்து போராடியது. நீட் விவகாரத்தில் அதிமுக மீது பழி சுமத்துவது ஏற்கக்கூடியது அல்ல. 

நீட் பிரச்சனையில் முந்தைய அரசுகள் செய்த தவறை சரி செய்வதற்காகவே நாங்கள் போராடினோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம். காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர்தான் நீட் தேர்வுக்கு
ஆதரவாக வாதாடினார். 

இவ்வாறு கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios