சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சாதாரண பொது மக்கள்  குடிநீர் கிடைக்காமல் அலைபாய்ந்துகொண்டிருக்கிறார்கள். 

பல மாவட்டங்களில் கால்நடைகள் செத்து மடிகின்றன. சென்னையின் தண்ணீர் விநியோகத்தில் மிகவும் முக்கியமானவையாக இருந்த நான்கு ஏரிகளும் வறண்டுவிட்டன. 

சோழவரம், போரூர், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகள் கடந்த ஆண்டின்போது இதே நேரத்திலிருந்த தண்ணீரின் அளவில், நூற்றில் ஒரு பங்கு அளவுதான் தற்போது இருக்கிறது. 

ஏரிகளின் தற்போதைய அளவு, அவற்றின் மொத்த கொள்ளளவில் 0.2 சதவிகிதம் மட்டும்தான். ஆனால், முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் என ஆளும் கட்சியைச் சார்ந்த பலரும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை  என்றே கூறி வருகின்றனர்.

மோட்டார் பழுது போன்ற காரணங்களால் சில இடங்களில் தண்ணீர் வராமல் இருக்கிறது, பிரச்சனை உள்ள இடங்களில் உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். மழை பெய்ய ஆரம்பித்ததும் தண்ணீர் பிரச்சனை காணாமல் போகும் என்றும் வேலுமணி தெரிவித்துள்ளார்..

அமைச்சர்களின் பேச்சுக்கள் பொது மக்களிடயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் ஆத்திரதையும் ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் தண்ணீருக்காக அல்லாடிக் கொண்டிக்கும்போது,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நாள் ஒன்றுக்கு 9000 லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதாக தெரிகிறது.

இதே போல் அமைச்சர்கள் வீட்டுக்கு 6000 லிட்டர் தண்ணீர் நாள் ஒன்றுக்கு சப்ளை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு ஆங்கில நாளிதழுக்கு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் ஒருவர் அளித்த பேட்டியில் அவர்  இவ்வாறு கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுள்ளது.