Warrants canceled on Vijayakanth
செய்தியாளரைத் தாக்கிய வழக்கில் விஜயகாந்த் மீது ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட்டை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த விஜயகாந்திடம், தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சிலர் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
செய்தியாளரின் கேள்வியால் விஜயகாந்த் கோபமடைந்ததாக கூறப்படுகிறது. விஜயகாந்துக்கும் செய்தியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தாம் தாக்கப்பட்டு தள்ளிவிடப்பட்டதாக விஜயகாந்த்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செய்தியாளர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் விஜயகாந்த், அனகை முருகேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனகை முருகேசன் கைது செய்யப்பட்டார். விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் ஆலந்தூர் நீதிமன்றம், அந்த வழக்கை நேற்று விசாரித்தது. இதையடுத்து, விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், விஜயகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் விஜயகாந்த் மீதான பிடிவாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சைக்காக, சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவித்தும், அதனை ஏற்காமல் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விஜயகாந்த் தரப்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்,, ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், அனகை முருகேசன் மீதான பிடிவாரண்டையும் ரத்து செய்து உயர்நிதிமன்றம் உத்தரவிட்டது.
