Walkie talkie scam exposes police department says Stalin

வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு விவகாரத்தில், டி.ஜி.பி. ராஜேந்திரனை பொறுப்பில் இருந்து விடுவிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று திமுக., செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 


வாக்கி-டாக்கி கொள்முதல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றும், இதனை அடுத்து டி.ஜி.பி. ராஜேந்திரனை பொறுப்பில் இருந்து விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ள மு.க. ஸ்டாலின், வாக்கி டாக்கி முறைகேடு குறித்து தனது முகநூல் பதிவிலும் தெரிவித்துள்ளார். 

சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையில் நடைபெற்றுள்ள 88 கோடி ரூபாய் ‘வாக்கி டாக்கி ஊழல்’ வெளிப்பட்டு இருப்பதன் மூலம் ‘குதிரை பேர’ அரசினால் இந்த நாடு எந்த நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டேன் என முகநூல் பதிவில் தெரிவித்துள்ள ஸ்டாலின், டெங்கு குறித்தும் குறிப்பிட்டுள்ளார். 

அவரது பதிவில், “எனது கொளத்தூர் தொகுதியில் உள்ள பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இன்றைய தினம் நேரில் சென்று, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து, அவர்களின் உடல்நலன் குறித்து கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தேன். அதேபோல, தொகுதியில் டெங்கு பாதிப்பு குறித்த நிலவரங்கள் குறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் விசாரித்து,உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது, இதுவரை தமிழகத்தில் ஏறக்குறைய 400க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு பாதிப்பால் இறந்திருப்பதாக ஆதாரங்களுடன் செய்திகள் வந்திருந்தும், அந்த உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சியில் ‘குதிரை பேர’ அரசு ஈடுபடுவது வெட்கக்கேடான செயல் என்றும் இந்த அரசு முன்னெச்சரிக்கையாக, ஆங்காங்கு சேர்ந்துள்ள குப்பைகளை முன்கூட்டியே அகற்றி, நீர் நிலைகளை எல்லாம் முறையாக சுத்தப்படுத்தி, பராமரித்து இருந்திருந்தால் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்தி இருக்க முடியும் என்றும் தெரிவித்தேன்” என்று கூறியுள்ளார்.