சசிகலா காலை உணவு எடுத்துக் கொண்டார், அவர் ஐசியுவில் அனுமதிக்க வேண்டிய நோயாளி அல்ல, அவர் நல்ல நிலையில் உள்ளார் அவரைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை என பௌரிங் மருத்துவமனை டீன் மனோஜ் தெரிவித்துள்ளார். சசிகலா உடல் நிலை குறித்து அவரது உறவினர்கள் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பியிருந்த நிலையில் மருத்துவமனை டீன் இவ்வாறு கூறியுள்ளார்.   

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா தண்டனை காலம் முடிந்து வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை  நிர்வாகத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு சிவாஜி நகரிலுள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இரண்டாவது நாளாக மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். 

பௌரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சசிகலா சிறப்பு சிகிச்சை பிரிவில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். சிறப்பு சிகிச்சை பிரிவில் போதிய வசதி இல்லாததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் 
சசிகலாவின் உறவினர்களான விவேக் ஜெயராமன், ஜெயானந்த் மற்றம் உதவியாளார் கார்த்திகேயன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை புரிந்து உள்ளனர்.

பின்னர் இது குறித்து தெரிவித்த அவர்கள், சசிகலாவை சந்திக்கவோ, அவரது உடல் நிலை குறித்தோ எந்த வித அதிகாரபூர்வ அரிவிப்போ, தகவலோ மருத்துவமனை சார்பில் வழங்கப்படவில்லை என அவர்கள் புகார் தெரிவித்திருந்தனர், மேலும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் சசிகலாவின் உயிருக்கு ஆபத்து உள்ளது என சந்தேகம் எழுப்பியிருந்தார். இந்நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள பௌரிங் மருத்துவமனை டீன் மனோஜ் செய்தியார்களை சந்தித்துள்ளார். அவர் கூறியதாவது: 

சசிகலா உடல் நலத்துடனே உள்ளார். அவருக்கு மூச்சுத்திணறல் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சனையின் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவரை கண்காணிக்கவே ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாரே தவிர அவர் ஐசியுவில் அனுமதிக்க வேண்டிய நோயாளி அல்ல. அவர் காலை உணவு எடுத்துக்கொண்டார் CT ஸ்கேன் எடுப்பதற்காக விக்டோரியா அழைத்து செல்லப்படுகிறார் 2 அல்லது மூன்று நாட்கள் மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்படுவார் எனவும்  பௌரிங் மருத்துவமனை டீன் மனோஜ் பேட்டி அளித்துள்ளார் .