நிரவி, திருப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு 144 தடை உத்தரவை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ப. பார்த்திபன் பிறப்பித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் தலைவர் வி.எம்.சி. சிவக்குமார், நிரவி பகுதியில் நேற்று மதியம் மர்மநபர்களால் வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் பார்த்திபன், 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நிரவி மற்றும் திருப்பட்டினம் ஆகிய பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையிலும், பொது சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவு நாளை நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் வி.எம்.சி. சிவக்குமாரின் சொந்த ஊரான திருமலைராயன் பட்டினத்தில் நேற்று மதியம் கடைகள் அடைக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கிழக்கு புறவழிச்சாலை வழியே விடப்பட்டன.