புதுச்சேரி முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் மர்ம நபர்களால் இன்று காரைக்கால் அருகே குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.

காரைக்கால் திரு-பட்டினத்தை சேர்ந்தவர் வி.எம்.சி.சிவக்குமார். தி.மு.க.முன்னாள் அமைச்சர். தற்போது அவர் அ.தி.மு.கவில் இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சிவகுமாரின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதன் எதிர் முனையில் பேசிய பெண், “எனது கணவரின் சொத்துக்களை நீங்கள் அபகரித்து வைத்திருக்கிறீர்கள். எனவே எனக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை தர வேண்டும். இல்லாவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி மிரட்டல் விடுத்ததாக றப்படுகிறது.

இதுகுறித்து வி.எம்.சி.சிவக்குமார் திருபட்டினம் போலீசில் புகார் செய்தார்.  அதில, காரைக்காலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாராய வியாபாரி ராமு கொலை செய்யப்பட்டார். இதனால், ராமுவின் 2வது மனைவி எழிலரசி, தன்னை செல்போனில் தொர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

இதுதொடர்பாக  வழக்குப்பதிவு செய்த போலீசார், வி.எம்.சி.சிவகுமாருக்கு எந்த ஊரில், எந்த நம்பரில் இருந்து வந்தது. உண்மையிலேயே பேசியது எழிலரசியின் குரல் தானா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வி.எம்.சி.சிவகுமார், நிரவி பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அங்கு நடக்கும் கட்டுமான பணிகளை பார்வையிட இன்று காலை புறப்பட்டார். அந்த பகுதியில் அவர் சென்றபோது, திடீரென மர்மநபர்கள், வி.எம்.சி.சிவகுமார் மீது வெடிகுண்டு வீசினர். இதில், படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.