சிஸ்டம் கெட்டுப்போச்சி அதே டயலாக்கை ரஜினிகாந்திற்கு எதிராக நடிகர் விஷ்ணு விஷால் வேறு வடிவத்தில் பயன்படுத்தியிருக்கிறார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர் முயற்சிக்குப் பின் கடந்த ஆறு மாத காலமாகச் சங்கம் ஒதுக்கீடு செய்யும் நாட்களில் மட்டும் படங்களை தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்து வருகின்றனர்.

இதனைச் சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டாலும் அதனையும் கடந்து இந்த ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வருகின்ற டிசம்பர் 21 அன்று சங்க முடிவுப்படி அடங்க மறு, பூமராங், சிலுக்குவார்பட்டி சிங்கம், ஆகிய படங்கள் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்பட்டது. திடீரென தனுஷ் தான் நடித்துத் தயாரித்துள்ள மாரி - 2 அதே நாளில் ரிலீஸ் என அறிவித்தார்.

இதனைத் தடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சி மேற்கொண்டது. விநியோகஸ்தர்கள் - தியேட்டர் உரிமையாளர்கள் - தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டுக் கூட்டம் டிசம்பர் 5 அன்று சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தயாரிப்பாளராக தனுஷ் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் தரப்பில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை. இக் கூட்டத்தில் கலந்து கொண்ட விநியோகஸ்தர் சங்க முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தயாரிப்பாளர்கள் சங்கமுடிவை கறாராக அமுல் படுத்துங்கள் என விஷாலை வற்புறுத்தினார்கள் என்கிறார்கள்.

திமிரு புடிச்சவன் படத்தை சங்கமுடிவை மீறி ரிலீஸ் செய்த விஐய் ஆண்டனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே போன்று தனுஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தயாரிப்பாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. அப்படி ஒரு முடிவு எடுக்கப்படும் நிலையில் தனுஷ் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும். அடுத்ததாக கலைப்புலி தாணு தயாரிக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்,

ரஜினிகாந்த் மருமகன் என்கிற பல விஷயங்கள் விஷாலை யோசிக்க வைத்திருக்கிறது. அதனால் இப்பிரச்சினையில் சங்க தலைவர் என்கிற முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி அனுமதி பெறாமல் வரும் மாரி - 2 படத்தைத் தடுத்து நிறுத்தவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ விரும்பாத விஷால் டிசம்பர் 14, 21 ஆகிய நாட்களில் விருப்பப்படும் அனைவரும் படங்களை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

கூட்டுக் கூட்டத்தில் விஷாலுக்கு ஆதரவாகப் பேசியவர்கள் கூட்டம் முடிந்தவுடன் தனுஷ் அலுவலகம் சென்று மாரி - 2 படத்தின் விநியோக உரிமையைப் பெற்றது உச்சக்கட்ட காமெடி..

இவை அனைத்தையும் நேரில் அருகில் இருந்து பார்த்ததன் விளைவுதான் ரஜினி கூறிய அரசியல் டயலாக்கை அவரது குடும்பத்திற்கு எதிரான விமர்சனத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார் விஷ்ணுவிஷால். தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப்போச்சி மாற்ற வேண்டும் என சொன்ன ரஜினியின் மருமகன் தனுஷ் 1000 உறுப்பினர்களைக் கொண்ட சங்கத்தின் சிஸ்டத்தை சீர்குலைத்து விட்டார் - அதனைத் தடுக்க வேண்டிய ரஜினி மௌன குருவாக இருக்கிறார்.