திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட நடிகர் விஷால் ஆயத்தமாகி வருவதாக ஏற்கனவே ஆசியா நெட் தமிழ் கூறியிருந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக விஷால் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட நடிகர் விஷால் ஆயத்தமாகி வருவதாக ஏற்கனவே ஆசியா நெட் தமிழ் கூறியிருந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக விஷால் கூறியுள்ளார். இரும்புத்திரை படத்தின் 100வது நாள், விஷாலின் பிறந்த நாள் மற்றும் விஷால் ரசிகர் மன்ற கொடி அறிமுக விழா என சென்னை கலைவாணர் அரங்கில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் விஷால் கலந்து கொண்ட பேசினார். அப்போது ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்த போது அதிர்ச்சி அடைந்தவர் இரும்புத்திரை படத்தின் இயக்குனர் மித்ரன் தான் என்றார்.

 ஆர்.கே.நகரில் போட்டியிட சென்றுவிட்டால் இரும்புத்திரை படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்று மித்ரன் பயந்தார். எனவே அவர் கோவில் கோவிலாக சென்று ஆர்.கே.நகரில் எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று வேண்டினார். அவரது வேண்டுதல் நிறைவேறி எனது வேட்பு மனு ஆர்.கே.நகரில் நிராகரிக்கப்பட்டதாக விஷால் கூறிய போது அரங்கில் சிரிப்பலை எழுந்தது. எனவே அடுத்த முறை தேர்தலில் போட்டியிடும் போது மித்ரன் சென்ற கோவில்களுக்கு சென்று வேட்பு மனு ஏற்கப்பட வேண்டும் என்று தானும் வேண்டுதல் வைக்கப்போவதாக விஷால் தெரிவித்தார். மேலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் வர உள்ளது. நம்ம மதுரை மாவட்டத்தில் உள்ள தொகுதி திருப்பரங்குன்றம். எனவே அதில் நாள் போட்டியிட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று பேசி முடித்தார். 

 பின்னர் விஷால் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அதற்கு அடுத்து விஷால் தனது ரசிகர் மன்றத்தை விஷால் மக்கள் நல இயக்கம் என்று பெயர் மாற்றினார். மேலும் ரசிகர் மன்றத்திற்கு என பிரத்யேக கொடியையும் விஷால் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேஷ்டி சட்டையில் வந்து விஷால் அசத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், தான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட போதே கூறினேன், அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிடுவேன் என்று அதன் படி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. இருந்தாலும் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் கலந்து பேசி திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று விஷால் கூறினார். இதனிடையே தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆவதுஉறுதி என்று விஷால் சபதம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.