virtual number for aadar govt to plan
ஆதார் அடையாள அட்டை தொடர்பாக அந்தரங்க விவரங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அச்சங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அதை போக்கும் வகையில் ‘இணைய’ ஆதார் (virtual Adhar) அட்டையை ‘உதய்’(UIDAI) அமைப்பு நேற்று அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து ஆதார் வழங்கும் ‘உதய்’ அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-
பாதுகாப்பு அச்சம்
ஆதார் அடையாள எண்ணை பல்வேறு அடையாளங்களுக்காக பயன்படுத்தும் போது, அதில் தனிநபர் சார்ந்த விவரங்கள் திருடப்படுவதாகவும், பாதுகாப்பு தொடர்பாகவும் பல்வேறு அச்சங்கள் நிலவின.அதை தடுக்கும் வகையில் ‘இணைய ஆதார்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இணைய ஆதார்
இந்த ‘இணைய’ ஆதார் அட்டையை ஆதார் இணையதளத்தில் இருந்து பதவிறக்கம் செய்து கொள்ள முடியும். சிம் கார்டு வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெறும் போது, அடையாள அட்டைக்காக இதை பயன்படுத்திக் கொள்ளலாம். 12 இலக்க ஆதார் எண்ணை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆதார் விவரங்கள் சரிபார்ப்பு நேரத்தில் 12 இலக்க எண்ணை தரத் தேவையில்லை என்பதால், இந்த இணைய ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட விவரங்கள்
இந்த இணைய ஆதார் அடையாள அட்டையில் 16 இலக்க எண், பெயர், முகவரி, புகைப்படம் போன்றவை இடம்பெற்றுவரும். ஒரு நிறுவனத்தின் அடையாள அட்டை சரிபார்ப்புக்கு இது ஒன்றே போதுமானது.
மார்ச் 1
இந்த இணைய ஆதார் என்பது தற்காலிகமானதுதான். 16 இலக்க ஆதார் எண் ஒரு நபரின் ஆதார் எண்ணுக்கு பதிலாக வழங்கப்படுவதாகும். இந்த இணைய ஆதார் முறை என்பது, மார்ச் 1ந்தேதிமுதல் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஜூன் 1
ஒரு தனிநபரின் அடையாளத்துக்காக பெறும்போது, இணைய ஆதாரை ஜூன் 1-ந்தேதி முதல் அனைத்து நிறுவனங்களும் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை முறை வேண்டுமானாலும்
இது குறித்து ஆதார் வழங்கும் ‘உதய்’ அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ உதய்அமைப்பு அறிமுகம் செய்துள்ள ‘இணைய ஆதார்’ மூலம் ஒரு ஆண் அல்லது பெண் எத்தனை முறை வேண்டுமானாலும், இணைய ஆதாரை உருவாக்கி பதிவிறக்கம் செய்து கொள்ளளாம். புதிதாக ஒரு இணைய ஆதார் உருவாக்கும் போது, ஏற்கனவே இருப்பது தானாகவே செயலற்றதாகிவிடும்.
இணையதளத்தில் இருந்து இந்த இணைய ஆதாரை பதிவிறக்கம் செய்யும்போது, அது குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பின் புதிதாக ஒன்று உருவாக்கிக் கொள்ளலாம்’’ எனத் தெரிவித்தார்.
ஒரு தனிநபரின் ஆதார் அட்டை குறித்த அந்தரங்க விவரங்கள் குறித்த அச்சப்பாடு நிலவி வரும் நிலையில், அதை அச்சத்தை போக்கும் வகையில், இந்த நடவடிக்கையை உதய் அமைப்பு எடுத்துள்ளது.
