மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை இந்தியா கேட்  முன்பு 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ட்ராக்டருக்கு தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்ததுடன், இவ்வன்முறை போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா, ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. வேளாண் தொழில் தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு மாற்றாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை என்றும் அவர்களை பெருநிறுவனங்களுக்கு அடிமையாக்கி விடும் என்றும் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து அகாலிதளம்  பிரிந்தது , ஷிரோமணி அகாலிதளத்தின் தலைவரும், மோடி அமைச்சரவையில் உணவு பதப்படுத்தும் அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாடல், மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜினாமா செய்துள்ளார். சனிக்கிழமையன்று, அகாலிதளமும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பிரிந்ததாக அறிவித்தது. அதேபோல் இந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் அரியானா மாநிலங்களில் விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில்  போராட்டம்  தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் தொழிலாளர்கள் இன்று 7:15 முதல் 7:30  மணிக்குள்ளாக சுமார் 15 முதல் 20 பேர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே  திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது லாரியில் ஏற்றி வந்த பழைய  டிராக்டரை இந்தியா கேட் அருகே  சாய்த்து அதை தீ வைத்து கொளுத்தினர். அத்துடன் விவசாய மசோதாவை எதிர்த்து முழக்கமிட்டதுடன், பகத்சிங் வாழ்க என்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஜிந்தாபாத் என்று முழக்கம் எழுப்பினர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மிகவும் பாதுகாப்பான இந்தியா கேட் பகுதியில் இளைஞர் காங்கிரஸார் ட்ராக்டரை எரித்து  போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மளமளவென எரிந்த தீயை அணைத்தனர். வன்முறையை தூண்டும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டின் பல  பகுதிகளிலும் விவசாயிகளும் அரசியல்கட்சிகளும் விவசாய சட்டத்திற்கு எதிராக கடுமையாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கது.