விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னர் கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரிடமும் தொலைபேசி மூலம் பேசி ஆதரவு கேட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தயார் செய்து வைத்திருந்தார். அதன் படி விக்கிரவாண்டியில் தனது ஆதரவாளரையும், நாங்குநேரியை ஓபிஎஸ் ஆதரவாளருக்கும் கொடுக்க முடிவு செய்திருந்தார். அப்படியே தற்போது வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

நல்ல நேரம் பார்த்து வேட்பாளர் பட்டியலை நியுஸ் ஜெ தொலைக்காட்சியில் ஒளிபரப்புமாறு கூறிவிட்டு கேரளா புறப்பட்டார் எடப்பாடி. ஆனால் நியுஸ் ஜெ தொகுதியில விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் வேலு என பிளாஸ் நியுஸ் ஓட செம டென்சன் ஆகியுள்ளார் எடப்பாடி. பிறகு தான் அது டைப்பிங் எரர் என்று கூறி அவருக்கு புரிய வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வேட்பாளர் பட்டியல் அறிவித்த உடன் பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாக தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார் எடப்பாடி. அப்போது இடைத்தேர்தலில் ஆதரவு தர வேண்டும் என்றும் பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என்றும் எடப்பாடி கேட்டுள்ளதாக சொல்கறிர்கள். இதற்கு விஜயகாந்த் தரப்பும் வாசன் தரப்பும் உடனடியாக ஓகே சொல்லியுள்ளது. ஆனால் வழக்கம் போல் ராமதாஸ் மட்டும் மழுப்பலாக பதில் சொன்னதாக தெரிகிறது.

 

ஏற்கனவே வேலூர் தொகுதி பிரச்சாரத்திற்கு ராமதாசை அழைத்து அழைத்து வெறுத்துப் போனது அதிமுக டீம். வேட்பாளர் ஏசி சண்முகம் மீதான அதிருப்தி காரணமாக அங்கு பிரச்சாரத்திற்கு ராமதாஸ் வரவில்லை என்றார்கள். அதே சமயம் அன்புமணியும் கூட பிரச்சாரத்திற்கு வரவில்லை. இதனை ஏசி சண்முகம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் விக்கிரவாண்டி அப்படி இல்லை. அங்கு வன்னியர்கள் தான் பெரும்பான்மை. பாமகவிற்கு அங்கு நல்ல செல்வாக்கு உண்டு. எனவே விக்கிரவாண்டியில் ராமதாஸ், அன்புமணி பிரச்சாரம் மிக முக்கியம். ஆனால் வேலூரை போல் ராமதாஸ் டிமிக்கி கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். இதற்கிடையே வேலுமணி, சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் ராமதாசை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக சொல்கிறார்கள்.