விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளராக இறங்க நடைபெற்ற பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டு புகழேந்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து திமுக தனிப்பெரும் சக்தியாக நாடாளுமன்றத்தில் உருவெடுத்தது. இதன் பிறகு திமுகவின் அடுத்த வாரிசாக உதயநிதி களம் இறக்கப்பட்டார். அப்போது முதலே சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பதில் அவர் தீராத ஆசையுடன் இருந்தார். இதனால் தான் இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் திமுகவே வேட்பாளர்களை நிறுத்த வேண்டும், நாங்குநேரியை காங்கிரஸ் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பேசி வந்தார்.

இதற்கிடையே உதயநிதியின் டீம் விக்கிரவாண்டி தொகுதிக்கு சென்று கள நிலவரத்தை ஆராய்ந்து கொடுத்த ரிப்போர்ட் அனைத்தும் அவருக்கு சாதகமாகவே இருந்தது. இதனால் விக்கிரவாண்டியில் போட்டியிடுவதில் உதயநிதி மிகவும் ஆர்வம் காட்டினார். ஜாதகம் பார்த்த போதும் அதிலும் உதயநிதிக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.

இதனால் அவர் தான் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் என்று விழுப்புரம் மாவட்ட திமுகவினர் இடையே தகவல்கள் பரவின.  மாவட்டச் செயலாளர்க பொன்முடியின் மகன் நேரடியாக உதயநிதி பெயரில் விருப்ப மனு பூர்த்தி செய்து வழங்கினார். ஆனால் ஸ்டாலின் இந்த விஷயத்தில் திடீரென பின்வாங்கிவிட்டதாக கூறுகிறார்கள். விக்கிரவாண்டி தொகுதி திமுகவிற்கு சாதகமாக இருந்தாலும் கூட அங்கு பாமகவிற்கு கணிசமான வாக்குகள் உண்டு.

மேலும் இடைத்தேர்தல் என்பதால் ஆளும் கட்சியை எதிர்கொள்வது சிரமம். முதல் தேர்தலிலேயே தான் தோல்வி அடைந்தது போல் தனது மகனும் தோல்வி அடைந்துவிட்டால்? என்று அவர் மனதில் எழுந்த கேள்வி தான் உதயநிதியை காத்திருக்க வைத்துவிட்டது என்கிறார்கள். ஏனென்றால் ஸ்டாலின் தான் போட்டியிட்ட முதல் தேர்தலில் தோல்வி அடைந்தார். அந்த சென்டிமென்ட் தனது மகனுக்கும் வந்துவிடக்கூடாது என்பதால் பொதுத் தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டதாக சொல்கிறார்கள்.