Vijayendra would not have done deliberately - Sriravicankar

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் வேண்டுமென்றே செய்திருக்க மாட்டார் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் கூறியுள்ளார்

பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை அரிகரன் எழுதிய தமிழ் - சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி தொடக்கத்தின்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். விஜயேந்திரரும் எழுந்து நின்றார். நிகழ்ச்சி முடிவின்போது, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். ஆளுநர் உட்பட மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்றிருந்தனர். விஜயேந்திரரின் இந்த செய்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், காஞ்சி சங்கர மடம், விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்று கூறியது. மேலும், மடத்தில் வழிபாடுகளில் ட கடவுளை வாழ்த்தும் ஏகாம்பரேவரர் மந்திரம் உள்பட எதற்குமே அவர் எழுந்து நிற்க மாட்டார். நாங்கள் மட்டுமே எழுந்து நின்று கொண்டிருப்போம். கடவுள் பாடலுக்கே எழுந்து நிற்காதவர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஏன் எழுந்து நிற்க வேண்டும் என்று மடத்தை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிற்காதவர், தேசிய கீதத்துக்கு மட்டும் எழுந்து நின்றது ஏன் என்ற கேள்விக்கு, இது என்ன கேள்வி? எவராக இருந்தாலும் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என சட்டமே இருக்கிறதே! என்று அவரது விளக்கம் இருந்தது.

விஜயேந்திரருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனன். மேலும், தமிழகத்தில் உள்ள காஞ்சி சங்கர மடங்கள் நாள்தோறும் முற்றுகையிடப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் விஜயேந்திரர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் கூறும்போது, திமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் விஜயேந்திரர் வேண்டுமென்றே செய்திருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.

தமிழக பாஜக விவசாய அணி சார்பில் அஸ்வமேத ராஜசூய யாகம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. மூன்றாவது நாளான நேற்று 108 கோபூஜை நடைபெற்றது. இதில், யானை, குதிரை, காளைகளுக்கு பூஜை செய்யப்பட்டது.

யாகத்தில் கலந்து கொண்ட பின்னர், ஸ்ரீரவிசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இதுபோன்ற யாகங்களால்தான் மக்கள் நலமோடு வாழ்கிறார்கள். நாங்கள் நாடு முழுவதும் உள்ள 8 நதிகளை மீட்டுள்ளோம். தமிழகத்தில் உள்ள 100 குளங்கள், ஏரிகளைச் சுத்தம் செய்துள்ளோம்.

தமிழகத்தில் 85 நதிகள் இருப்பதாக பதிவு செய்துள்ளது. ஆனால், பதிவுகளில் மட்டுமே அது உள்ளது. மறைந்துபோன ஆறுகளையும் மீட்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் விஜயேந்திரர் வேண்டுமென்றே செய்திருக்க மாட்டார். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்திருக்க மாட்டார் என்று ஸ்ரீரவிசங்கர் கூறினார்.